ஜெகன்மோகன் ரெட்டிக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன்



கடந்த 16 மாதங்களாக சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.துர்காபிரசாத ராவ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜெகன்மோகன் மனைவி பாரதி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்தத் தகவல் வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.2 லட்சத்துக்கான சொந்த பிணைத் தொகை மற்றும் அதே தொகைக்கான இரு நபர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

நீதிமன்ற அனுமதி பெறாமல் ஹைதராபாதை விட்டு வெளியேறக் கூடாது என்றும் சாட்சிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ திசைதிருப்ப முயலக் கூடாது என்றும் ஜெகன்மோகனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை ஜெகன்மோகன் மீறினாலும், ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை சிபிஐ அணுகலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கு பின்னணி...

ஆந்திரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேர ரெட்டி முதல்வராக இருந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனங்களில் பல நிறுவனங்கள் முதலீடு செய்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

இதுதவிர, வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகவும் ஜெகன்மோகன் ரெட்டி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவரை கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி கைது செய்த சிபிஐ போலீஸார், சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகன் மீதான விசாரணையை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு கெடு விதித்திருந்தது. இந்த கெடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முடிந்தது.

இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி ஜெகன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆண்டு அக்டோபர் 5 மற்றும் இந்த ஆண்டு மே 9 ஆகிய தேதிகளில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE