டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் அழைப்பை ஏற்று, அவரை ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை சந்திக்கவுள்ள நிலையில், காங்கிரஸின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தருவதாக, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜே.பி.அகர்வால் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றிடம் அகர்வால் கூறும்போது, "ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தருகிறோம். அக்கட்சி ஆட்சியமைத்துக் கொள்ளலாம். டெல்லி மக்களுக்கு ஓர் அரசு வேண்டும். ஆட்சியமைக்க வேண்டிய பொறுப்பு ஆம் ஆத்மியிடம் உள்ளது" என்றார்.
ஆத் ஆத்மி நிராகரிப்பு...
ஆம் ஆத்மிக்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்த உடனே, அதை ஆத்மி கட்சி நிராகப்பதாக தெரிவித்தது.
இது குறித்து ஆத் ஆத்மி கட்சியின் முத்த தலைவர் பிரஷாந்த் பூஷன் கூறும்போது, "நாங்கள் காங்கிரஸ் ஆதரவை ஏற்பதாக இல்லை" என்றார்.
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். இப்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 32 இடங்களும், ஆம் ஆத்மிகட்சிக்கு 28 இடங்களும், காங்கிரஸுக்கு 8 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சைக்கு தலா ஓர் இடமும் கிடைத்தன.
காங்கிரஸ் ஆதரவை ஆம் ஆத்மி ஏற்றுக்கொண்டால், அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால், டெல்லியில் ஆட்சியமைக்க மாட்டோம் என்று அக்கட்சி இன்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனால், தொடர்ந்து டெல்லியின் நிலை கேள்விக்குறியாவே உள்ளது.
முன்னதாக, டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தங்களிடம் இல்லாததால், ஆட்சி அமைக்க இயலாது என்று துணை நிலை ஆளுநரிடம் பாஜக கூறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.