மோடியின் கைகளில் சிவப்புக் கறை: சல்மான் குர்ஷித் பதிலடி
கடந்த சனிக்கிழமை கான்பூரில் நடைபெற்ற பேரணியில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்து பேசிய மோடி, இந்த விவகாரத்தில் காங்கிரஸின் கைகளில் கறுப்புக் கறை படிந்துள்ளதாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடியாக குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா கலவரம் சம்பவத்தில் மோடியின் கைகளில் சிவப்புக் கறை படிந்துள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறும்போது, "நிலக்கரியை எரித்து சமையல் செய்பவர்களின் கைகள் கறுப்பாகத்தான் இருக்கும். எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதனால், எங்களின் கைகள் கறுப்பானால், அதைப் பற்றி கவலையில்லை. '
ஆனால், உங்களின் (மோடி) கைகள் சிவப்பாக இருக்கிறதே. யாருக்கு சேவை செய்ததனால் உங்களின் கைகளில் சிவப்புக் கறை படிந்துள்ளது? உங்கள் கரங்கள் சிவந்து இருப்பதற்கு காரணம், மருதாணியா அல்லது வேறு ஏதாவதா? (கோத்ரா கலவரம்)" என்று கேள்வியெழுப்பி உள்ளார்.
கருத்து கூற வேண்டாம்...
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அந்த விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அஃப்ஸல் கூறுகையில், "நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் சிபிஐ விசார ணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அதற்கு இடையூறு செய்யும் வகையிலான கருத்துகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்கக் கூடாது. ஆளாளுக்கு கருத்து சொல்லத் தேவையில்லை. தொடர்ந்து கருத்து சொல்லி வரும் பாஜக, தன்னை உச்சநீதி மன்றத்தைவிட மேலானதாக கருதுகிறதா?" என்றார்.
ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், "நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியவையாக உள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள ஒதுக்கீடுகளின் மூலம் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் பயனடைந்துள்ளனர் எனத் தெரிகிறது. எனவே, அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்ய வேண்டும்" என்றார்.