அதிகாரத்தைப் பயன்படுத்தாவிட்டால் அழியும் விளையாட்டு

By சேகர் குப்தா

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் கடைசியாகப் பதக்கம் வாங்கியது எப்போது என்று கேட்டால், பதில் எளிதில் நினைவுக்கு வந்துவிடாது. 1980-ல் மாஸ்கோவில் நடந்த போட்டியில் தங்கம் வென்றதைக் கூறுவோம். ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைந்ததைக் கண்டித்து பல நாடுகள் போட்டியில் பங்கேற்காததால் நமக்குத் தங்கம் கிடைத்தது. சரியான விடை, மெக்சிகோ சிட்டியில் 1968-ல் நமக்குக் கிடைத்தது வெண்கலம் என்பதுதான். 1975-ல் கோலாலம்பூரில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் ஆனோம். 1960-கள் வரை ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டி என்றாலே இந்தியாவும் பாகிஸ்தானும் நிச்சயம் இருக்கும். இப்போதும்கூட அந்த விளையாட்டில் முதல் 4 அணிகளுக்குள் ஒன்றாக இருக்கிறது பாகிஸ்தான். இந்திய ஹாக்கி நிரந்தர அழிவைத் தேடிக்கொண்டுவிட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு ஒலிம்பிக், உலகப்போட்டி, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி என்று அனைத்திலும் தோற்றுக்கொண்டே இருந்தது.

தோல்விக்குக் காரணம் இந்திய ஹாக்கி சம்மேளன நிர்வாகிகள் என்று முதலில் பழியை அவர்கள் மீது போட்டோம். விளையாட்டு வீரர்களுக்குப் போதிய பணம், பரிசுகள், பதவிகள் போன்ற ஊக்குவிப்புகள் இல்லையென்றோம். செயற்கை ஆடுகளத்தை (ஆஸ்ட்ரோ டர்ஃப்) ஐரோப்பியர்கள் உருவாக்கியதால் நம்மால் வெற்றிபெற முடியவில்லை என்றோம். அதற்குப் பிறகு ஹாக்கி பற்றிப் பேசுவதையே நிறுத்திவிட்டோம். அது இப்போதும் நம்முடைய தேசிய விளையாட்டாகத் தொடர்கிறது. ஒலிம்பிக் போட்டியில் 9 முறையும் உலகக் கோப்பையில் ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

பாகிஸ்தானிலும் ஹாக்கி மதிப்பிழந்தது. எனவே எண்பது ஆண்டுகளாக உலகை ஆதிக்கம் செய்த துணைக் கண்டத்து ஹாக்கி முடிவுக்கு வந்தது.

ஐரோப்பாவில் உள்நாட்டுப் போட்டிகளும் தேசிய அணிகளும் பெருகின. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஹாக்கியா டென்னிஸா என்று சந்தேகப்படும் அளவுக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சரமாரியாக கோல்களை அடித்தன. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் கூட இதைப் பார்த்து பீதியடைந்தது. உலகுக்கு ஹாக்கிப் போட்டியை அறிமுகம் செய்த நாடுகளில் ஹாக்கி முடிவுக்கு வந்துவிட்டது என்றால் சம்மேளனம் பீதியடையாமல் என்ன செய்யும்? இதனாலேயே ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ் பயிற்சியாளர் ரிக் சார்ல்ஸ்வொர்த் போன்றவர்கள் இந்தியாவுக்கு வந்து அணிக்குப் பயிற்சி தரத் தொடங்கினர்.

ஹாக்கி விளையாடும் களம் மட்டுமல்ல பாணியும், விதிகளும்கூட மாறிவிட்டன. புதிய ஹாக்கியில் வேகமாகவும் பலமாகவும் பந்தை அடிக்க வேண்டும். 5-3-2-1 என்ற அணிவகுப்பில் ஓரணியின் வீரர்கள் களத்தின் முன்வரிசை, இடை, பின்வரிசை, கோல் கம்பம் அருகில் நின்று ஆடுவது முடிவுக்கு வந்தது. நில ஹாக்கி என்பது ஐஸ் ஹாக்கி விளையாட்டைப் போல மாறியது. கோல்கள் அதிகம் விழத் தொடங்கின. ஐரோப்பியர்களுக்கு அது முற்றிலும் கைவரப்பெற்றது. கோப்பை பெறுவதில் மட்டுமல்ல ஆட்ட விதிகளை நிர்ணயிப் பது உள்ளிட்ட நிர்வாகத்திலும் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய அணிகள் மார்ச் தொடங்கி செப்டம்பர் வரையில் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடின. அதில் பெரும்பகுதி நமக்குக் கடுமையான கோடைக்காலம் என்பதால் இந்திய ஹாக்கி அணியால் விளையாடி பயிற்சி பெற முடியவில்லை.

ஆனால் ஐரோப்பியர்களின் இந்த உத்திகள் ஹாக்கிக்கு எதிராகவே திரும்பின. அவர்களுக்கு ஏராளமான மெடல்கள் கிடைத்தன. ஆனால் ஹாக்கியைப் பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டம் குறைந்தது. வசூலும் இல்லை. ஹாக்கி சரிவை நோக்கிச் செல்லத் தொடங்கியது. இந்த அனுபவத்திலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம், ஒரு விளையாட்டில் நமக்கு போதிய அதிகாரம் இல்லையென்றால் செல்வாக்கு மிக்க நாடுகள் அந்த ஆட்டத்தையே தங்களுக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ளும்.

கிரிக்கெட்

அடுத்த விளையாட்டு கிரிக்கெட். இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாட்டுக்கான அமைப்பை இங்கிலீஷ் கிளப்புகளிடமிருந்து பெற்றது. இந்தியாவைப் போல அல்லாமல் பாகிஸ்தானில் நிர்வாகத்தை அரசு ஏற்றது. 1952-ல் அவசரச் சட்டம் இயற்றிய பாகிஸ்தான் அரசு பிறகு நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியது. சர்வாதிகாரி அயூப்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை 1957-ல் திருத்தியமைத்து 3 துணைத் தலைவர்களை நியமித்தார். அதில் ஒருவர் அயூப்கான்!

பிறகு 1974-ல் முதலாவது இடைக்கால போர்டு நியமிக்கப்பட்டது. அன்றிலிருந்து அதிபர் அல்லது பிரதமர் போர்டின் புரவலராக இருப்பார். ராணுவத்தில் லெப். ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, மூத்த அரசு அதிகாரி, அரசியல்வாதி, பத்திரிகை ஆசிரியர் ஆகியோர் போர்டில் நிர்வாகிகளாக இடம் பெறுவர்.

திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தும் பாகிஸ்தானின் பெயர் உலகு முழுக்கப் பரவியது ‘மேட்ச்-ஃபிக்சிங்’ என்ற சூதாட்டத்தால்தான். இதனால் நிதிநிலைமையும் மோசமானது. பயங்கரவாதிகளின் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி வெளிநாட்டு அணிகள் வருவதில்லை. கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் வளர்ந்ததைப்போல பாகிஸ்தானில் வளரவில்லை.

சமீபகாலமாக இந்தியாவில் கிரிக்கெட்டில் அதிகம் தலையிட்டுக்கொண்டிருக்கிறது நீதித்துறை. நோக்கம் நல்லதாக இருந்தாலும் இது மோசமான விளைவையே ஏற்படுத்தும். தனியாரால் நடத்தப்பட வேண்டியவை விளையாட்டு சங்கங்கள். அரசு எப்படித் தலையிட்டாலும் ஆபத்துதான்.

அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் புதுக் கதையாகும். ஆம், இந்திய ஹாக்கி புத்துயிர் பெற்றிருக்கிறது. அரசு ஆதரவில் புதிய தலைமை, ஹாக்கி நிர்வாகத்துக்கு வந்தது. உள்நாட்டில் லீக் போட்டிகளுக்கு ஏற்பாடுகள் தொடங்கின. உலக அளவில் சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் இந்தியா வரத் தொடங்கினர். அரங்கங்கள் நிறையத் தொடங்கியுள்ளன.

இந்திய அணி இப்போது உலக சாம்பியன் ஆகிவிடவில்லை. இப்போதும் ஐரோப்பாவுக்குச் சாதகமாகத்தான் ஆட்ட விதிகள் இருக்கின்றன. முதல் 6 அணிகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால் உலகக் கோப்பை, ஒலிம்பிக், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகளில் விளையாட தொடர்ந்து தகுதி பெற்றுக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் ஹாக்கி அணிக்கு இந்தியா ஒரு சந்தையை உருவாக்கித் தந்துள்ளது. அதனால் சிறந்த வீரர்கள் வருவது மட்டுமல்ல இந்தியர் ஒருவர் உலக ஹாக்கி சம்மேளனத் தலைவராகவும் வர முடிந்திருக்கிறது. நிதி செல்வாக்கிருந்தால் அதைப் பயன்படுத்தி அதிகாரமுள்ள பதவியை எப்படிக் கைப்பற்றலாம் என்பதற்கு இது நல்ல பாடம்.

இதை மிகைப்படுத்தல் என்று நினைக்க வேண்டாம். 1971-72 பருவத்தில் சுழல் பந்து வீச்சின் மூலமே லார்ட்ஸ் மைதானத்தில் 2 தொடர்களில் இந்தியா வென்றது. உடனே சர்வதேச கிரிக்கெட் சங்கம் ‘லெக்-சைட்’ ஆட்டக்காரர்கள் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. மேற்கிந்திய அணி வேகப்பந்து வீச்சின் மூலம் வெற்றி பெறத் தொடங்கியதும் ஒரு ஓவரில் இத்தனை பவுன்சர்களைத்தான் வீச வேண்டும் என்று கட்டுப்படுத்தியது. அன்று வீழ்ந்த மேற்கிந்திய கிரிக்கெட் அணி அதன் பிறகு அதிலிருந்து மீளவேயில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொண்டு செயல்படுகிறது. இப்போது அதையெல்லாம் கைவிட்டுவிட்டு ‘நல்ல பிள்ளை’களாய் நடந்துகொள்ளச் சொல்லி உத்தரவிடப்படுகிறது.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்