மாதம் 35 கிலோ இலவச அரிசி: சத்தீஸ்கரில் காங். தேர்தல் வாக்குறுதி
அதில், மாதத்துக்கு 35 கிலோ இலவச அரிசி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், ஒரு குவிண்டால் நெல் விலை ரூ. 2,000 ஆக நிர்ணயிக்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தேசிய பொருளாளரும் கட்சியின் சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரசார குழுத் தலைவருமான மோதிலால் வோரா எம்.பி. தலைநகர் ராய்ப்பூரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவின்டால் ரூ.2,000 ஆக விலை நிர்ணயிக்கப்படும். அதில் ரூ.500 குடும்பத்தின் பெண் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். வருமான வரி செலுத்துவோர் தவிர இதர அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்துக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். 5 எச்.பி. பம்புசெட் வைத்துள்ள விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும்.
வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும். பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சினை குறித்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சம உழைப்பு, சம ஊதியம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குயிடினருக்கான இடஒதுக்கீடு 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக அதிகரிக்கப்படும். நக்ஸல் பிரச்சினையால் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்வது தடுக்கப்படும், நீண்ட காலத் திட்டங்கள் கொண்டு வரப்படும், அரசுப் பணிகளில் காலியிடங்கள் விரைந்து நிறைவேற்றப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில் நவம்பர் 11, 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.