இரும்பு மனிதர் அத்வானியை துருப்பிடிக்க விட்டு விட்டார்கள்: நிதீஷ் குமார் தாக்கு

பாரதிய ஜனதா கட்சியின் இரும்பு மனிதராக விளங்கிய எல்.கே. அத்வானியை துருப்பிடிக்க விட்டு விட்டார்கள் என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம் சாட்டி உள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் பா.ஜ.க.வுக்கு எவ்வித பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்திருப்பதால் அக்கட்சியினர் சிலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதால் மக்களவைத் தேர்தலில் பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு இது நிரூபணமாகும்.

பாஜகவின் இந்த முடிவால் கட்சியின் இரும்பு மனிதராக விளங்கிய அத்வானி துருப்பிடிக்க விடப்பட்டுள்ளார்.

கட்சியின் சொந்த இரும்பு மனிதன் துருப்பிடிக்க விடப்பட்டுள்ள நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் சுதந்திர சிலைக்குத் தேவையான இரும்பை நாடு முழுவதும் தேடி கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளனர் என்றார் நிதீஷ்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் சரத் யாதவ் கூறியுள்ள நிலையில், கூட்டணி குறித்து அக்டோபர் மாதத்துக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என நிதீஷ் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து யாதவ் கூறியதில் முரண்பாடு எதுவும் இல்லை என்றும், இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை என்றுதான் அவர் கூறியுள்ளார் என்றும் நிதீஷ் தெரிவித்தார்.

ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சி சரிவு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சூழல் நிலவுகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி தேர்தலை சந்திப்பதற்கு சரியான வாய்ப்பு இருந்தது. ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் அனைத்தும் பாழாக்கப்பட்டுள்ளது என்றும் நிதீஷ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் கடந்த 17 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. எனினும், குஜராத் கலவரம் காரணமாக மோடிக்கும் பிகார் முதல்வர் நிதீஷுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜகவின் மக்களவைத் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE