டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் எப்படிப்பட்ட தலைவராக உருவெடுப்பார் என்று கணிப்பதில் தோற்றுவிட்டேன். இப்போது அவர் நடத்தும் அரசியல் பாணி குறித்து, ‘நான் அப்போதே சொன்னேன்’ என்று கூற முடியாத நிலையில் இருக்கிறேன்.
‘பேச்சிலும் செயலிலும் கடுமையாக இல்லாமல் பக்குவத்துடன் நடக்க வேண்டியதன் அவசியத்தை போகப்போக கற்றுக்கொள்வார்’ என்று 2014-ல் எழுதிய ‘ஆன்டிசிபேட்டிங் இந்தியா’ என்ற புத்தக முன்னுரையில் எழுதியிருந்தேன். மிக உயர்ந்த பதவியிலும் இருந்துகொண்டு, புரட்சிக்காரரைப் போல கொடி பிடித்துக்கொண்டும் இருக்க முடியாது என்று எழுதினேன், அப்படித்தான் நினைத்தேன். அவரைக் கணிப்பதில் தோற்றுவிட்டேன்.
“என்னுடைய வெற்றியாலும் என்னுடைய கட்சியின் வெற்றியாலும் பிரதமர் மிகவும் விரக்தி அடைந்திருக்கிறார்; எனவே என்னைக் கொல்லக்கூட அவர் முயலக்கூடும்” என்று சுருக்கமான குரல் பதிவை சமூக ஊடகங்களின் சுற்றுக்கு அளித்திருக்கிறார். இப்படிப்பட்ட குற்றச்சாட்டு நம்முடைய அரசியலில் புதிய திருப்பு முனையாகத் தெரிகிறது; அதே வேளையில், அரசியல் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து வருகிறது என்பதையும் காட்டுகிறது. இதை ‘மகா மட்டம்’ என்று வர்ணித்துவிட முடியாது. காரணம், ட்விட்டர் யுகத்தில் மாற்றி மாற்றி அரசியல் தலைவர்கள் ஏசிக் கொள்வது வழக்கமாகிவிட்டபடியால் இதையும் விட மட்ட ரகமான விமர்சனங்கள் வரக்கூடும்.
ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் கேஜ்ரிவா லின் லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும், மோடிக்கு அடுத்த இடத்தில் உள்ள தலைவர் யார் என்றால் அது கேஜ்ரிவால்தான் - ராகுல் காந்தி அல்ல! இந்த லாவணி ஏன் என்று கேட்டால், ‘இதைத் தொடங்கியதே மோடிதான், அவர் தான் எங்கள் தலைவரை ‘ஏ.கே.-49’ என்று கேலி பேசினார்’ என்பார்கள்.
கேஜ்ரிவால் முதல் முறை பதவியேற்றபோது 49 நாள்(களுக்குத் தான்) முதல்வர் என்பதையே மோடி அவ்வாறு குறிப்பிட்டார். ‘ஏ.கே.’ என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அது இடைவிடாமல் படபடவென்று வெடிக்கும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கி. இன்னொன்று, ‘ஏ.கே.47’ ரக துப்பாக்கியை பாதுகாப்புப் படைக்கு அடுத்தபடியாகப் பயன்படுத்துவது அரசுக்கு எதிராகப் போராடும் தீவிரவாதிகள்தான். தீவிரவாதி என்ற பொருளில்தான் மோடி அப்படி அழைத்தார். முதல் முறை 49 நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்தாலும் மீண்டும் போட்டியிட்டு 70 தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி முதல்வரானார். அதற்குப் பிறகு, ‘இருவரும் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ள மாட்டார்கள், கேஜ்ரிவால் டெல்லி நிர்வாகத் தில் கவனம் செலுத்துவார்’ என்ற நமது எதிர் பார்ப்பெல்லாம் பொய்த்துவிட்டது. தனிப்பட்ட சண்டைக்குப் பதில், ‘பெரிய போரே’ தொடங்கிவிட்டது.
மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு முதலமைச்சர், பிரதமருக்கு எதிராக வரிந்து கட்டுவது இது முதல் முறையல்ல. ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ், மேற்கு வங்கத்தின் ஜோதி பாசு (கொல்கத்தாவுக்குச் சென்ற ராஜீவ் காந்தி அதை செத்த நகரம் என்று வர்ணித்தது நினைவுக்கு வருகிறதா?) ஆகியோரும் பிரதமருடன் மோதியிருக்கிறார்கள். மாயாவதி கான்சிராம் இணைந்து கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்கள். சமீப காலத்தில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தவர்கள்.
சாதாரண குற்றச்சாட்டல்ல
பிரதமர் என்னைக் கொல்லப்போகிறார் என்று ஒரு முதலமைச்சர் கூறுவது வெறும் ஏச்சு அரசியல் அல்ல, அதற்காக ஆம் ஆத்மி கட்சியை மட்டும் நாம் குறைகூற முடியாது. 2004 மக்களவை பொதுத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி, ‘காந்தி’களை மிகவும் மட்டரகமாக விமர்சித்தார். கார் டிரைவர், கிளார்க் வேலைகள் கூட அவர்களுக்குக் கிடைக்காது என்றார். சோனியா காந்தி யார், திருமணத்துக்கு முன்னால் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று தெரிந்தால் யாரும் அவருக்குக் குடியிருக்கக்கூட வீடு தரமாட்டார்கள் என்றார்; காங்கிரஸ் கட்சியை அவர் கைப்பற்றிய பிறகு காங்கிரஸார் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலுக்குப் பதிலாக ‘வந்தே மாதா ரோம்’ என்று பாட ஆரம்பித்துவிட்டார்கள் என்றார். அவருடைய பேச்சை பாஜக தலைமை நிராகரித்தது; அப்போது பாஜக தலைவராக இருந்த வெங்கய்ய நாயுடு அதிருப்தி தெரிவித்தார். அதன் பிறகே மோடியும் அப்படிப் பேசுவதை நிறுத்தினார். 2004-ல் நடந்த, ‘நடந்து கொண்டே பேச்சு’ நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த மோடி அந்தப் பேச்சிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதாகக் கூறினார். கிரிக்கெட்டில் வீச்சாளர் சில வேளைகளில் ‘நோ-பால்’, ‘வைட்-பால்’ வீசுவதைப்போலத்தான் இதுவும் என்று சமாளித்தார். சோனியா காந்தியும் பிரச்சாரக் கூட்டங்களில் மோடியை ‘மவுத் கி சவுதாகர்’ (மரண வியாபாரி) என்று சாடினார். அப்படிப் பேசியதற்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை.
அரசியல் சட்ட சீர்குலைவு
தன்னைக் கொல்ல பிரதமர் விரும்புகிறார் என்று ஒரு மாநில முதல்வர் கூறுவது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதையே காட்டுகிறது. உங்களுடைய பிரதமரே உங்களைக் கொல்லப் போகிறார் என்றால் பாதுகாப்பு கேட்டு நீங்கள் யாரிடம் ஓடுவீர்கள்? டெல்லி மாநில காவல்துறை கூட முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் நீங்கள் பாதுகாப்புக்கு அவர்களைக்கூட நம்ப முடியாது. ஒரு கூட்டரசில் - இதுவரை இருந்திராத வகையில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே உறவு சீர்குலைந்த பிறகு அதை எப்படி சீர்செய்வது?
காவல்துறையும் மத்தியப் புலனாய்வுத் துறையும் (சி.பி.ஐ.) ஆம் ஆத்மி அரசியல் தலைவர்களுக்கும் கேஜ்ரிவாலுக்கு நெருக்க மான அரசு அதிகாரிகளுக்கும் எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை பார்க்கும்போது பழிவாங்குகிறார்கள் என்பது சந்தேகமின்றித் தெரிகிறது. இவற்றை நியாயப்படுத்த ஏதும் இல்லை, நீதிமன்றங்கள் ஏற்கெனவே பொறுமை இழந்து கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டன.
டெல்லி மாநில சட்டப் பேரவைக்கு இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து, ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரும்பான்மை வலு கிடைத்த பிறகும் வழக்கமான நிலைக்கு மாநிலம் திரும்பிவிடவில்லை என்பதும் உண்மை. கோபம், விரக்தி காரணமாக பாஜக எதிர்க்கிறது என்றால் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தும் உத்தியுடன் ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கிறது. 2019 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு தேசிய அளவில் மாற்று ஆம் ஆத்மி கட்சி, மாற்றுத் தலைவர் கேஜ்ரிவால்தான், ராகுல் காந்தியோ - காங்கிரஸோ கிடையாது என்ற வகையிலேயே ஆம் ஆத்மி கட்சி எதிர்த்துக் கொண்டிருக்கிறது.
பதவியிலும் இருந்து கொண்டு, பூசலிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க முடியாது. மோடி அரசுதான் என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்தது என்று கேஜ்ரிவால் நிச்சயம் கூற முடியாது. அரசியலின் தன்மையையே மாற்றுவேன் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் அவர் அளித்த வாக்குறுதி, நாம் எதிர்பார்த்தபடி நிறைவேறவில்லை. படித்தவரும் அதிகாரியாக இருந்தவருமான ஒருவர் அமைதியாக திட்டமிட்டு எல்லா காரியங்களையும் செய்து முடிப்பார் என்பதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறார்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago