ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூவரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்தது. மேலும் அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதில், முதல் மூன்று பேரையும் விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இ
தனை விசாரித்த நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த 20-ம் தேதி உத்தர விட்டது.
இந்நிலையில் நளினி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்வதை எதிர்த்தும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆஜரானார். அவர் வாதாடியபோது, 'மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரிட் மனு ஏற்புடையது அல்ல. 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு பதில் அளிக்காமல் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது' என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் குற்றவாளிகள் தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு. மாநில அரசுக்கு கிடையாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதாவது:
எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடை முறைகளை பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம்.
அந்த நடைமுறைகளின்படி குற்றவாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்திடம் அறிக்கை கோர வேண்டும். அதன்பின்னரே உரிய முடிவு எடுக்க வேண்டும்.
குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு காரணம் நாங்கள்தான். இதற்கு இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காண்போம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் மனு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை 4 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.