அவதூறு வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தில், விமர்சன குரல்களை ஒடுக்க அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந் துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், பிடிவாரன்ட் பிறப்பித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்நிலை யில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அரசின் கொள்கைகள் விமர்சிக்கப்பட்டாலோ அல்லது பொதுவாழ்வில் இருக்கும் ஒரு நபர் விமர்சனத்துக்கு உள்ளானாலோ அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர விமர்சன குரல்களை ஒடுக்கும் வகையில் மாநில அரசு இயந் திரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது” என்று அறிவுறுத்தினர்.
ஏற்கெனவே, கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை அரசை விமர்சித்ததாக 131 அவதூறு வழக்குகள் தாக்கல் செய் யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பணம், நேரம் வீணடிப்பு
உச்ச நீதிமன்றத்தின் கருத்து குறித்து மனித உரிமை செயற் பாட்டாளரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. எதற் கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வது மாநில அரசின் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதாக உள்ளது. தேவை யில்லாமல் அவதூறு வழக்குகள் தொடர்வதால் பணம், நேரம் வீணடிக்கப்படுகிறது. இந்த பணம், நேரத்தை வேறு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். அடிப்படை உரிமைகளை அவ தூறு வழக்குகள் மூலம் ஒடுக்கு வது நியாயமற்றது. பொதுவாழ்க் கையில் இருப்பவர்கள், மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ள வேண்டும். நான் எது சொல்கிறேனோ அது மட்டும்தான் சரி என்ற வகையில், மற்ற அனைவரின் குரல்வளையை நெரிக்கும் வகையில் அவதூறு வழக்குகள் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன்:
ஆட்சியில் இருப்பவர்கள், தேர்தல் மூலம் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுத்தான் ஆட்சிக்கு வருகிறார்கள். எனவே, தன்னம் பிக்கையோடு விமர்சனங்களையும் சந்திக்க வேண்டும். மேலும், தனக்கு எதிராகவும் மக்கள் வாக்களித்து அனுப்பிய பிரதிநிதி பேசுவதை அவதூறு என்று கருதக்கூடாது. தன் கருத்துக்கு மாறுபட்ட கருத்து என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு தமிழகம் முழுவதும் அவர்களின் கட்சியினர் உள்ளனர். எனவே, அவர்கள் மாற்றுக் கருத்து குறித்து மக்களிடமே கூட்டம் போட்டு தெரிவிக்கலாம். அதற்கு பதிலாக வழக்கு போடுவது என்பது, யார் மீது வழக்கு போடு கிறார்களோ அவர்களுக்கு இரட்டிப்பு விளம்பரத்தை தருகிறது. எனவே, அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி அவதூறு வழக்கு போடக்கூடாது. கட்சியைப் பயன் படுத்தி கருத்துக்கு கருத்து என்ற ஜனநாயக முறையைத்தான் அவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பி.எஸ்.அஜிதா:
ஒரு அரசை விமர்சனம் செய்யும் உரிமை சாமானிய மக்களுக்கும் உள்ளது. எதிர் அணியில் உள்ள அரசியல் கட்சியினர் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தால் அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வது என்பது ஒரு வகையில் மிரட்டும் செயல். தனிப்பட்ட நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் மட்டுமே அவதூறு வழக்கு தொடர வேண் டும். ஒரு அரசானது விமர்சனங் களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அதை எதிர்த்து வழக்கு போடுவது தவறு. உச்ச நீதி மன்றத்தின் இந்த கண்டனம் ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள ஆறுதல். ஜனநாயகத்தின் குரல் வளையை யார் நெரித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவதூறு வழக்குகளில் அக்கறை செலுத்துவதற்கு பதிலாக நல்ல நிர்வாகத்தை கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.ராஜலட்சுமி:
தமிழக முதல்வர் என்பவர் 7 கோடி மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி. அவர் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகி உள்ளார். பொதுவாக எதிரணியில் உள்ள அரசியல் கட்சியினர் தனிப்பட்ட யாரையும் விமர்சனம் செய்வதில்லை. மக்கள் பிரதிநிதியாக உள்ள முதல்வரை தாக்கி, அவருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்தான் அவதூறு பரப்புகின்றனர். முதல்வர் என்ற பதவியை குறி வைத்து அவதூறு பரப்பும்போது, அதை அவர் சட்ட ரீதியாக அரசு வழக்கறிஞர் மூலமாகத்தான் வழக்கு தொடர முடியுமே தவிர, அதற்காக அவர் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தினார் என குறை கூற முடியாது. அவதூறு சட்டப் பிரிவுகள் இருப்பதால்தான் நாகரிகமான முறையில் சாடுகின்றனர். இல்லை எனில் அரசியல் நாகரிகம் தரம் தாழ்ந்து சென்றுவிடும். சட்டத்தை மீறி தமிழக அரசு செயல்படவில்லை. அவதூறு வழக்குகளில் குற்றவியல் ரீதியாக உள்ள பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழக முதல்வருக்காக அரசு வழக்கறிஞர்தான் வழக்கு தொடர முடியும். ஏதோ புதிதாக அதிமுக மட்டுமே அவதூறு வழக்குளை தொடர்ந்துள்ளது என்பது போன்ற மாயத்தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வழக்கு தொடர்ந்துள்ள தேமுதிகவும் அரியணையில் அமர்ந்தால் இதைத்தான் செய்திருக்கும்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்:
எந்த அவதூறு வழக்கிலும் இதுவரை யாருக்கும் தண்டனை விதிக்கப்பட்டதாக வரலாறு கிடையாது. தமிழக முதல்வர் தன் மீது தொடுக்கப்படும் விமர்சனங்களை எதிர்த்து தனது வழக்கறிஞர் மூலமாக தனியாகத்தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமே தவிர, அவர் அரசு வழக்கறிஞர் மூலம் அவதூறு வழக்கு தொடருவது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
யார் யாரெல்லாம் ஆளுங் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்கிறார்களோ அவர்களை எதிர்த்து உடனே அவதூறு வழக்கு தொடுக்கப்படுகிறது. இதில் தமிழகம்தான் முன்னிலையில் இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றமும் பதிவு செய்துள்ளது. நீதித்துறையை எதிர்த்து எத் தனையோ விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவற்றை நீதிபதிகள் பெருந்தன்மையோடு எதிர்கொள்கின்றனர். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளி்ல் அரசியல் கட்சியினர் விமர்சனங்களை தங்களது ஆரோக்கியமான அரசிய லுக்கு நல்ல கருவியாக எடுத்துக்கொள்கின்றனர். அது போல தமிழக அரசும், முதல்வரும் விமர்சனங்களை பொறுத்து, ஆரோக்கிய அரசியலுக்கு வித்திட வேண்டும்.
ஆவடி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன்:
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு களில் அவதூறு எண்ணத்துடனும், அவதூறு வார்த்தைகளுடன் சொல்லப்பட்ட விஷயங்கள் பற்றி நாங்கள் வழக்கு தொடர்ந்துள் ளோம். எவ்வித உள்நோக்கத்துட னும் நாங்கள் வழக்கு தொடர வில்லை. எந்த வழக்கிலும் எங்களுக்கு உள்நோக்கம் கிடை யாது. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்துதான் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
நீதிபதி சொன்ன விஷயங் கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அது முறையும் கிடையாது. அனைத்து வழக்கு களும் எந்த உள்நோக்கத்துடனும் தொடரப்படவில்லை. சொல்லப் பட்ட வார்த்தைகள், விதங்கள் இதில் எல்லாவற்றிலும் அவதூறு நோக்கமும், அவதூறு செய்தியும் இருந்ததால்தான் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அவதூறு வழக்குகளை ஆயுதமாக பயன்படுத்தும் எண்ணமும் தமிழக அரசுக்குக் கிடையாது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago