தமிழக சட்டப்பேரவையில் நிகழ்ந்தது ஜனநாயகத்துக்கே இழுக்கானது: வெங்கய்ய நாயுடு வேதனை

By பிடிஐ

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் ஜனநாயகத்துக்கு இழுக்கானது. அரசியல்வாதிகளின் இத்தகைய நடத்தையால் அரசியல் முறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் ஏற்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஓபிஎஸ் அணியினரும், ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், எதிர்க்கட்சியனர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மேஜை, நாற்காலிகள் உடைக்கப்பட்டு, காகிதங்களும் சுக்கு நூறாக கிழிக்கப்பட்டு சட்டப்பேரவை முழுவதும் பறக்கவிடப்பட்டன. இதனால் தமிழக சட்டப்பேரவை போர்க்களம் போல காட்சியளித்தது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஜனநாயகத்துக்கு இழுக்கானது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ''எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது. அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறான விதத்தில் எம்எல்ஏக்கள் நடந்து கொண்டுள்ளனர். இதனால் அரசியல் முறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க கூடும்'' என்றார்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE