ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டு நிதி? மத்திய அரசு விசாரணை

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டதாக எழுந்த புகார் குறித்து அரசு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தில்லி உயர்நீதிமன்றம், ஆம் ஆத்மி கட்சியின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து அதன் நிதி ஆதாரம் குறித்து அறியும்படி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி குறித்து தீவிர விசாரணை நடப்பதாக ஷிண்டே தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து ரூ. 19 கோடி தேர்தல் நிதி வசூலாகியுள்ளது என அக்கட்சியின் தேசிய செயலர் மற்றும் நிதி, நன்கொடைப் பிரிவு பொறுப்பாளருமான பங்கஜ்குப்தா கூறியிருந்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ரூ.20 கோடி வசூலிப்பதே எங்கள் இலக்கு. அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங், கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் ரூ.6 கோடி வழங்கியுள்ளனர். நாங்கள் இந்தியர்களிடம் இருந்து மட்டுமே நன்கொடை பெறுகிறோம். வேறு யாரிடம் இருந்தும் பெறுவதில்லை. சில வெளிநாட்டவர்கள் நன்கொடை கொடுக்க விரும்பிய போது மறுத்து விட்டோம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE