தனியார் மின் நிறுவனங்களுக்கு கேஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லியில் தனியார் மின் நிறுவனங்கள் செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மின் வெட்டுகளை அமல் படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

தனியார் மின் நிறுவனங்களுக்கு கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் இன்று முதல் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு அமல் படுத்தப்போவதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில், செயற்கை மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தனியார் மின் விநியோக நிறுவனங்கள் டெல்லி அரசை மிரட்டி வருவதாக அந்த அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி தனியார் மின் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து சி.ஏ.ஜி ஆய்வு செய்து அறிக்கை வெளியிடட்டும் அந்த அறிக்கையில் உண்மை வெளிக்கொண்டு வரப்படும் என்றும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆனால், சி.ஏ.ஜி ஆய்வுக்கு அந்த நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்காதது பல சந்தேகங்களை எழுப்புகிறது. தொடர்ந்து தனியார் மின் நிறுவனங்கள் இதே மாதிரி பிடிவாதம் பிடித்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யவும் டெல்லி அரசு தயங்காது என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், டெல்லியில் மின்வாரிய நிறுவனங்களை நடத்த டாடா, அம்பானியை விட்டால் வேறு குழுமம் இல்லாமல் இல்லை. இந்நிறுவனங்கள் தொடர்ந்து முரண்பாடாக செயல்பட்டால் நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE