பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொண்டு வந்துள்ள புதிய மதுவிலக்கு சட்டத்தை இன்னும் முழுதாகப் படித்துப் பார்க்கவில்லை. மதுவை வெறுக்கும் ஒரு மதத்தின் ஆட்சி வரும்போது இந்த சட்டம் அதற்கு அடிப்படையாக இருக்கக்கூடும்.
மதுவுக்கு எதிராகப் போராடியவர்கள் இதுவரை செல்லாத இடத்துக்கு இந்தச் சட்டம் செல்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பையனோ அல்லது வேறு யாரோ, உங்களுக்குத் தெரியாமல் சாப்பிடுவதற்காக ஒரு மது புட்டியை ஒளித்து வைத்திருந்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் சிறைக்குச் செல்ல வேண்டும். வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டின் சொந்தக்காரரா? உங்களுக்குப் புதிய பொறுப்பும் அதிகாரமும் இச்சட்டத்தின் மூலம் கிடைக்கிறது. குடித்தனக்காரர் குடித்தால் வீட்டுக்காரர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் மது ஒழியவில்லை என்றால் கிராமம் முழுவதற்குமே கூட்டு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குகிறது இச்சட்டம். 21-வது நூற்றாண்டு நிர்வாகத்துக்கு, 19-வது நூற்றாண்டில் பிரிட்டிஷார் கடைப்பிடித்த கூட்டு அபராதத் தண்டனை தீர்வாகிறது! சரி இந்த வழக்கெல்லாம் நீதிமன்றத்தில்தானே நடக்கும், வாய்தா வாங்கி தப்பிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? வாய்ப்பே கிடையாது. மதுவிலக்குக் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் வரப்போகின்றன.
முதல்வரின் தீவிர சிந்தனை
எப்படியாவது பிஹாரிலிருந்து மதுவை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்று முதலமைச்சர் நிதிஷ் முடிவு செய்துவிட்டதால் நன்கு ஆலோசித்து, மிகச் சிறந்த சட்டத்தை உருவாக்கிவிட்டார்! இருந்தாலும் புத்திசாலிகள் சில கேள்விகளைக் கேட்கக்கூடும். திருந்தாத குடிகாரர்களை மாவட்ட ஆட்சியர் 6 மாதங்களுக்கு ஊரைவிட்டு விலக்கி வைக்க முடியும். மது மட்டும் அல்லாது திராட்சைச் சாறில் சீனியைக் கலந்து ஊறவைத்திருந்தாலும் மதுவிலக்கு சட்டத்தை மீறிய குற்றம்தான். அப்படிப்பட்டவர்களை எங்கே விலக்கி வைப்பது? பக்கத்து கிராமத்திலா, பக்கத்து மாவட்டத்திலா, அல்லது ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற பக்கத்து மாநிலத்திலா அல்லது டெல்லி, மும்பை போன்ற தொலைதூர நகரங்களிலா?
நீங்கள் ஏழையான பிஹாரியா? பஜாரி லிருந்து 300 அடி அல்லது 600 அடி தொலைவில் இருந்துகொண்டு கள் குடிக்கலாம் அல்லது விற்கலாம். இந்தச் சட்டம் உங்களைத் தண்டிக்காது. எப்பேர்ப்பட்ட தள்ளாட்டமான மதுவிலக்கு சட்டம் இது!
புதிய கலாச்சாரம்
எந்தத் தகப்பனும் தன்னுடைய குழந்தைகள் மதுவையோ, பீடி - சிகரெட்டையோ தொடு வதைக்கூட விரும்பமாட்டார். நிதிஷும் அப்படிப் பட்ட நல்ல தகப்பனார்தான். ஆனால் இந்திய அரசியல் வானில் புதிதாக முளைத்துவரும் ஒரு கலாச்சாரத்தை அவரும் கையிலெடுத் திருக்கிறார். சாத்தியமோ இல்லையோ, மக்களுடைய ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றால் அதையே தேர்தல் நேரத்தில் அறிவித்து அதை நிறைவேற்றுவதற்கான செயல்களில் இறங்குவது என்பதே அந்தக் கலாச்சாரம்.
பிஹார் அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டம் நீதிமன்றத்தின் பரிசீலனைக்குப் போனால் தாங்குமா என்பதே எல்லோருடைய கேள்வியும். இந்தச் சட்டம் அரைகுறையான புரிதல்களோடு இயற்றப்பட்டிருந்தாலும் இதை நிராகரிக்க முதலில் மாநில ஆளுநரும் பிறகு குடியரசுத் தலைவருமே கூட தயங்குவார்கள்.காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான மதுவிலக்குக் கொள்கையை அல்லவா இந்தச் சட்டம் மூலம் நிதிஷ் அமல்படுத்த உத்தேசித்திருக்கிறார்? மத்தியில் ஆளும் பாஜக இந்த சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் மூலம் ஒப்புதல் தருவதுடன் மேலும் கொடூரமான சில சட்டப் பிரிவுகளையும் கூட சேர்க்க முற்படும்.
இன்றைய கவர்ச்சி அரசியலின் சூத்திரமே, நிறைவேற்றவே முடியாதவற்றை வாக்குறுதிகளாக அள்ளிவிடுவதுதான். தேர்தலில் வெற்றி பெற்று வந்தபிறகு இதைப்போல அரைகுறை சட்டங்களை இயற்றிவிட்டு வம்பு, வழக்கு என்று அலைக்கழிக்கப்பட்டால், “நான் நல்ல நோக்கத்தில்தான் செய்தேன், அதற்கு இத்தனை தடைகள்” என்று பழியை யார் மீதோ போட்டு தப்பித்துவிட முடியும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதைத்தான் தன் பாணியில் செய்தது. ஏழைகளை அவர்களுடைய பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க பல சட்டங்களை இயற்றியது, ஊழலை ஒழிக்க அது ஜன லோக்பால் என்றொரு சட்டத்தை அதை நிறைவேற்றவே முடியாது என்று தெரிந்தும் கொண்டு வந்தது. இச் சட்டப்படி பக்கத்து வீட்டுக்காரர்கூட உங்களை உளவு பார்க்கலாம். லோக்பாலாக நியமிக்கப்படுகிறவரே விசாரணை அதிகாரியாகவும் வழக்கு தொடுப்பவராகவும் நீதி வழங்குபவராகவும் இருப்பார். அதனாலென்ன என்று கேட்கிறீர்களா? யார் மீதாவது ஊழல் புகார் என்றால், உன் ஊழலை மறைக்கிறேன் நீ சம்பாதித்ததில் எனக்கொரு பங்கைக் கொடுத்துவிடு என்று லோக்பால் பேரம் பேசி புகார்களை பைசல் செய்துவிடக்கூட வாய்ப்பு தந்த சட்டம் அது! இதை நீங்கள் விமர்சித்தால், ஊழலை ஒழிப்பதற்கு எதிரி என்ற பட்டம்தான் உங்களுக்குக் கிடைக்கும். கடைசியாக பல் பிடுங்கப்பட்ட பாம்பாக அந்த சட்டம் இயற்றப்பட்டது. லோக்பால் சட்டம் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஆபத்தாக முடிந்தது. இப்போது அதில் சிலருக்கு விலக்கு கோரப்படுகிறது. எதிர்காலத்தில் பிரதமருக்கும் விலக்கு தரப்படலாம். இப்படிப்பட்ட கொள்கைகளும் சட்டங்களும் மக்களால் விரும்பப்படுவதால் அதன் நிறை குறைகளை விவாதிப்பதற்கே அச்சம் ஏற்பட்டுவிடுகிறது.
தன்னுடைய மதுவிலக்கு சட்டத்தை எதிர்த்து எவராலும் வழக்கு தொடுக்க முடியாது என்று நிதிஷுக்குத் தெரியும். மும்பையில் நடன ‘பார்’களை ஒழிப்பது என்ற மகாராஷ்டிர அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள், வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று பேச முடிந்தது. ‘குடிப்பது எனது பிறப்புரிமை’ என்று யாரும் வழக்குப் போட முடியாது. இந்தச் சட்டத்துக்கு ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து இது அமலுக்கு வருவதற்கு நிறைய மாதங்கள் பிடிக்கும். அதுவரையில் ‘மதுவை ஒழித்த மாமனிதராக’ நிதிஷ் வலம் வரலாம். சட்டம் நிராகரிக்கப்பட்டால் யார் மீதாவது பழியைப் போட்டுவிடலாம்.
மதுவை ஒழிப்போம் என்று அறிவித்து கேரளத்தில் காங்கிரஸும் தமிழகத்தில் தி.மு.க.வும் அடைந்த தோல்வி குறித்து கவலைப்பட வேண்டாம். நிதிஷுக்கு சாதி ஓட்டுகள், லாலுவுக்கு இருப்பதைப் போல அதிகம் இல்லை. லாலுவுக்கு பிஹாரைத் தாண்டியும் செல்வாக்கு இருக்கிறது., மதச்சார்பற்றவர்கள் என்பதால் நிதிஷுக்கென்று தனி அடையாளம் தேவைப்படுகிறது. இனி மதுவிலக்குச் சட்டம் அவரைத் தனித்துக் காட்டும். பெண்களிடையே அவருக்கான ஆதரவு பெருகும். இறுதியில் இக் கொள்கை என்னவாகிறது என்பதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். இந்த நோக்கில்தான் நிதிஷ் இப்போது சிந்திக்கிறார்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago