தூதரக ரீதியான சட்டப் பாதுகாப்பு இல்லாமல், எங்களது நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதாக இருந்தால் மட்டுமே தேவயானியை அமெரிக்காவுக்குள் அனுமதிப்போம். அவ்வாறு அவர் வரும்போது அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார்.
நியூயார்க் நீதிமன்றத்தில் தேவயானி மீது விசா மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அவருக்கு தூதரக ரீதியிலான முழு சட்டப் பாதுகாப்பு கிடைத்ததால், வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் இந்தியா திரும்பினார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தேவயானிக்கு எதிராக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிலுவையில் இருக்கும். இந்த வழக்கில் வழக்கமான நடை முறையை பின்பற்றி வருகிறோம்.
தேவயானிக்கு அமெரிக்கா வருவதற்கான விசா வழங்கக்கூடாது என்று குடியேற்றத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி அவர் வந்தால், அவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்.
அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவதாக ஒப்புக்கொண்டால்தான், அவரை இனி வரும் காலங்களில் அமெரிக்காவுக்குள் அனுமதிப்போம். இதை தேவயானி இந்தியாவுக்கு புறப்படும் முன் அவரிடமும், இந்திய அரசிடமும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு ஜென் சாகி கூறினார்.
அமெரிக்கா வருத்தம்...
தேவயானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா கூறியதற்கு பதிலடியாக புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியது. இது தொடர்பாக ஜென் சாகி கூறுகையில், “எங்களின் தூதரக அதிகாரியை வெளியேற்ற இந்திய அரசு உத்தரவிட்டிருப்பது, வருத்தமளிக்கிறது. இந்தியாவின் உத்தரவைத் தொடர்ந்து, அந்த அதிகாரி அமெரிக்காவுக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டார்.
இந்திய அமெரிக்க உறவில் இது ஒரு சவாலான கால கட்டமாகும். இந்த உறவு முடிவுக்கு வந்துவிடாமல் தடுக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என நம்புகிறோம். இருதரப்புக்கும் இடையேயான உறவு விரைவில் மேம்படும்" என்றார்.
கைது வாரன்ட் பிறப்பிக்கவில்லை...
தேவயானிக்கு எதிரான வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பிரீத் பராராவின் அலுவலகத் தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இப்போதைக்கு தேவயானிக்கு எதிராக கைது வாரன்ட் எதுவும் பிறப்பிக்கப் படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அவருக்கு எதிர்காலத்தில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படலாம் என்றுதான் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளதே தவிர, இப்போது வாரன்ட் பிறப்பிக் கப்பட்டுள்ளதாகக் கூறவில்லை. நாங்கள் நீதிமன்றத்தை அணுகி கைது வாரன்ட் பிறப்பிக்குமாறு கோரவில்லை" என்றார்.
அப்படியே கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டாலும், தூதரக ரீதியான சட்டப் பாதுகாப்பு இருக்கும் வரை தேவயானியை கைது செய்ய முடியாது. அந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டால்தான், அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணையில் ஆஜர்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கை ரத்து செய்ய தேவயானி மனு...
நியூயார்க் விசாரணை நீதிமன்றத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள விசா மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி மேல் நீதிமன்றத்தில் இந்திய துணைத் தூதர் தேவயானியின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.