20 ஆண்டுக்கால கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி :இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேட்டி

ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜிஎஸ்எல்வி ராக்கெட், 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தபடி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மிகச் சரியாகச் செயல்பட்டது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான நாள்.

இந்த சாதனைக்கு, இந்திய விஞ்ஞானிகளின் 20 ஆண்டுகால கடுமையான உழைப்பே காரணம். இது, விண்வெளி தொழில்நுட்பத்தில் நாம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. முதல் முயற்சி தோல்வியடைந்ததும் மூன்றரை ஆண்டுகளாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களைச் செய்தனர்.

மங்கள்யான் விண்கலம் 95 லட்சம் கி.மீ. தொலைவில் நன்றாக செயல்பட்டு வருகிறது. அது திட்டமிட்டபடி செவ்வாய்கிரக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை ஏவுவதற்காக ஹரி கோட்டாவில் 3-வது ஏவுதளம் அதிநவீன தொழில்நுட்பத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.

சந்திரயான்-2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்ப, ரோவர் விண்கலத்தை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கும் பணியில் 3 குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ரோவர் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார் கே.ராதாகிருஷ்ணன்.பேட்டியின்போது, ஜிஎஸ்எல்வி திட்ட இயக்குநர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE