பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
பாம்பன் கலங்கரை விளக்கம் பகுதியைச் சார்ந்தவர் ராபின் என்பவரின் படகில் நான்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சனிக்கிழமை இரவு சென்றனர். இதில் அரிய வகை மீனான சூரிய மீன் ஒன்று சிக்கயது. அது சுமார் 18 கிலோ எடையும், 3அடி நீளமும், 4 அடி உயரமும் உடையதாகவும் இருந்தது. மீனின் வால் பகுதியான துடுப்பு பகுதி உருமாறியிருந்ததால் இந்த மீனை பாம்பன் மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்த மீனைப் பற்றி மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த மீன் அரிய வகை மீனின் பெயர் சன் பிஷ் (Sun Fish) ஆகும்.
இந்த அதிகப்பட்சம் 8அடி நீளமும், 2, 500 கிலோ எடை வரையிலும் இது வளரும் தன்மை கொண்டது. இந்த சூரிய மீன் நண்டு, சிப்பிகள், ஜெல்லி மீன்கள், இறால் ஆகியவற்றை விரும்பி உண்ணும். இந்த மீனின் துடுப்பு பகுதி மட்டும் உருமாறிக் காணப்படும்.
இந்த வகை சூரிய மீன்கள் அமெரிக்கா, கனடா, கொலம்பியா, அர்ஜென்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளின் கடல் பகுதியில் அதிகமாக காணப்படும். ராமேஸ்வரம் கடல் பகுதியில் காணப்படுவது மிகவும் அரிதாகும்.
250 மீட்டர் முதல் 500 மீட்டர் ஆழத்தில் வாழக் கூடிய சூரிய மீன்கள் ஒருநாளைக்கு சராசரியாக 25 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் நீந்தக்கூடியது ஆகும். மேலும் இந்த மீன் ஒரே நேரத்தில் 3 கோடி முட்டைகள் வரையிலும் இடும். பொதுவாக இந்த வகை மீனை மக்கள் விரும்பி சாப்பிடுவது கிடையாது, என தெரிவித்தனர்.