பாகிஸ்தான் ராணுவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நல்லதா, கெட்டதா, பெரியதா, சிறியதா? அணு ஆயுதங்களை வைத்துள்ள சீருடை அணிந்த இன்னொரு இஸ்லாமிய லஷ்கர் படையா? இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். தொலைக்காட்சியில் நடைபெறும் தீவிர தேசியவாத விவாதத்தில் நீங்கள் எந்தப் பக்கம் என்பதைப் பொறுத்ததே பதில். எது எப்படியிருந்தாலும் நம்முடைய ராணுவம்தான் பலம் மிக்கது - உண்மையும் அதுதான்.
தொழில்முறை ராணுவ வீரர்களைக் கொண்ட நமது ராணுவமும் பாகிஸ்தானை கிள்ளுக்கீரையாக நினைப்பதில்லை என்பதால்தான் ஒவ்வொரு மோதலின்போதும் இந்திய ராணுவத்தால் திட்டமிட்டு போரிட்டு வெல்ல முடிகிறது.
போரில் வெல்லாத ராணுவம்
சந்தேகம் வந்துவிட்டால் வெளிநாட்டு நிபுணரின் கருத்தை நாடுவதே விவேகம். இவ்விரு நாடுகளின் ராணுவத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்த பேராசிரியர் ஸ்டீபன் பி. கோஹன் எழுதிய ‘தி பாகிஸ்தான் ஆர்மி’ என்ற நூலில் கூறியிருப்பதைப் பார்ப்போம். ‘உலகிலேயே மிகச் சிறந்த ராணுவம், ஆனால் ஒரு போரிலும் வெற்றி பெற்றதில்லை’ என்று பாகிஸ்தான் ராணுவத்தை அவர் பாராட்டியிருக்கிறார்! அதனாலேயே பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜியா உல் ஹக் இப் புத்தகத்தை பாகிஸ்தானில் தடை செய்துவிட்டார்.
1965-ம் ஆண்டு போரில் வெற்றி பெற்றுவிட்டதாக பாகிஸ்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஆப்கானிஸ்தானில் சோவியத்துக்கு எதிரான போரிலும் வெற்றி பெற்றுவிட்டதாக அது இப்போது நம்பக்கூடும். அதே வியூகத்தை, ‘உண்மையான எதிரி’யான இந்தியாவுக்கு எதிராகவும் அது பயன்படுத்தக்கூடும்.
சில தலைமுறைகளாக தான் வென்றுவந்த தாகவே சொல்லிவந்த பாகிஸ்தான், இப்போது செப்டம்பர் 6-ம் தேதியை ‘ராணுவ தினமாக’ அனுசரித்து கொண்டாட்டங்களையும் அணி வகுப்புகளையும் நடத்துகிறது. பிரச்சினை என்னவென்றால் பாகிஸ்தானில் இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க எவருக்கும் துணிச்சல் இல்லை.
பாகிஸ்தான் ராணுவத்திடம் பல நல்ல அம்சங்கள் உள்ளன. உலக அளவிலான தரப்பட்டியலில் இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கிறது, உலகிலேயே 5-வது அல்லது 6-வது பெரியது. தளபதிகளின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில் மற்ற தொழில்முறை ராணுவங்களைப் போன்றது. அதே வேளையில், சித்தாந்த அடிப்படையிலும் தார்மிக அடிப்படையிலும் தனக்கு மிகப் பெரிய பங்களிப்பு இருப்பதாகவும் பிற ராணுவங்களைவிட தான் மிகவும் புனிதமானது என்றும் கருதிக் கொள்கிறது; அதனால்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் அப் பிரச்சினையைத்தான் நாம் இப்போது கடந்து கொண்டிருக்கிறோம். இதுவரை அந்த நாட்டின் அரசியல் ராணுவ வரலாற்றில் இருந்திராத வகையில் ஒரு முக்கியமான கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இருக்கிறது.
அதன் தலைமை, நாட்டின் அதிகாரத்தை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றவில்லை, ஆனால் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நவாஸ் ஷெரீபை பிரதமர் பதவியில் அமர்த்திய ராணுவம், அவருடைய அரசின் அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, தார்மிக அதிகாரத்தையும் தகர்த்துவிட்டது. 1965-ம் ஆண்டு போரை நினைவுகூர நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பல கொள்கை அறிவிப்புகளை பிரதமர் நவாஸ் மேடையில் அறிவித்துக் கொண்டே இருந்தபோது பாதுகாப்பு அமைச்சரோ பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தார்.
பாகிஸ்தானின் ஆட்சியதிகாரம் இப்போது யார் கையில் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் அது இருந்தது. நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பையும் வெளியுறவுக் கொள்கையையும் ராணுவம்தான் கவனித்துக் கொள்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செல்வாக்கு தேய்ந்து விட்டது என்பதை, தாஹிருல் காத்ரியும் இம்ரான் கானும் ராணுவ ஆதரவுடன் இஸ்லாமாபாதில் போக்குவரத்தை முழுக்க மறித்ததிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது. போதாக்குறைக்கு ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பத்திரிகை வெளியிட்ட ஊழல் பட்டியலில் ஷெரீப் குடும்பத்தவர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
ராணுவமே நம்பப்படுகிறது
பாகிஸ்தானின் அறிவுஜீவிகளில் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ‘சோம்பேறித் திருடர்களை’ விட, ராணுவத்தையே நம்புகின்றனர். ராணுவ வீரர்கள் பலரைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜெனரல் ரஹீல் ஷெரீஃப் இப்போது மக்களிடையே மிகவும் பிரபலமானவராகவும் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவராகவும் திகழ்கிறார்.
இந்த அளவுக்குப் புகழ்ச்சிக்கும் மதிப்புக்கும் உரியதா பாகிஸ்தான் ராணுவம் என்ற கேள்வி எழுகிறதா? இதற்கு விடைகாண, அது எப்படி நம்பிக்கையை ஏற்படுத்தியது என்பதிலிருந்து தொடங்க வேண்டும். காஷ்மீரத்தை மீட்பது அல்லது பாகிஸ்தானுக்குச் சாதகமான முடிவை ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கம் என்றால் 70 ஆண்டுகளாகியும் அது தன் லட்சியத்தை அடையத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறது. உண்மை என்னவென்றால் 1948-ல் தான் வைத்திருந்த காஷ்மீர் பரப்பளவைவிடக் குறைவாகத்தான் இப்போது வைத்திருக்கிறது.
சியாச்சின், கார்கில், துர்துக் ஆகிய பகுதிகளை இந்தியாவிடம் இழந்திருக்கிறது. பாகிஸ்தானின் எல்லைகளை அதன் ராணுவத்தால்தான் பாதுகாக்க முடியும் என்று மார்தட்டினால், ‘வங்கதேசம்’ என்ற பெயரை உச்சரித்தாலே அத்தனையும் கரைந்து உருகிவிடும். பாகிஸ்தான் தன்னுடைய நிலப்பரப்பில் பெரும் பகுதியையும் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) பெரும்பான்மையான மக்களையும் இழந்தது; மொழி, கலாச்சாரம், இனம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் முஸ்லிம்கள் அனைவரும் இடம்பெறக்கூடிய ஒரே துணைக் கண்டம் பாகிஸ்தான் தான் என்ற அதன் சித்தாந்தமே தோல்வி கண்டுவிட்டது.
சோவியத்துகளை வென்றது தாங்கள்தான் என்று அது மார் தட்டிக் கொள்ளலாம், ஆனால் ஆப்கானிஸ்தானில் அது இன்னமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறது. அது உருவாக்கிய ஜிகாதிகளும் உடன் சேர்ந்து போரிட்டும் போர் இன்னும் ஓயவில்லை.
கடந்த பல பதின் ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவம் இப்படி தன்னுடைய பிரதேசத்தை, மக்களை, சித்தாந்தத்தை இழந்தது மட்டுமல்லாமல் அதன் நிதி வளத்தையும் அறிவு வளத்தையும் கூட இழந்து கொண்டிருக்கிறது. 1985-ல் பாகிஸ்தானுக்குச் சென்ற நான், இந்தியாவைவிட அது வளமாகவும் நவீன மானதாகவும் இருக்கக் கண்டேன். அப்போது அதன் நபர்வாரி வருமானம் இந்தியாவைவிட 65% அதிகம். அப்போது ஆப்கானிஸ்தான் அனுபவம் அளித்த உத்வேகத்தில் இந்தியாவுக்கு எதிராக, எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதத்தை ஏவும் வேலையில் இறங்கியது. உலகிலேயே மிகச் சிறந்தது என்று கருதப்படும் பாகிஸ்தான் ராணுவம் இப்போது முதலாவதாக தனது நாட்டையே அழித்துக் கொண்டிருக்கிறது!
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago