டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிப்பவர்களின் பின்னணி வருமாறு:
மணீஷ் சிசோடியா (41)
ஆம் ஆத்மி கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரான மணீஷ் சிசோடியா, பத்திரிகையாளராக இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்தவர். பத்பர்கஞ்ச் தொகுதியில் பாஜகவின் நகுல் பரத்வாஜை 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா தோற்கடித்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகைத்துறையிலிருந்து விலகி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், அண்ணா ஹசாரேவுடன் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்தார்.
ஜன லோக்பால் மசோதா தொடர்பான போராட்டத்தின்போது அண்ணா ஹசாரேவுடன் இணைந்து சிறை சென்றவர் மணீஷ் சிசோடியா. தனக்கு ரூ. 41 லட்சத்து 83 ஆயிரத்து 942 மதிப்பிலான சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
கிரிஷ் சோனி (49)
கிரிஷ் சோனி, மடிப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கைலாஷ் சங்லாவை 1,100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த கிரிஷ் சோனி, உயர் கல்வி பயில பணம் இல்லாததால், ஏ.சி. மெக்கானிக் பட்டயப் படிப்பு படித்தார். ஆம் ஆத்மி கட்சியின் மின் கட்டணம், குடிநீர் தொடர்பான போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தியதில் முக்கிய பங்காற்றினார்.
சத்யேந்திர ஜெயின் (49)
கட்டடக் கலைஞரான சத்யேந்திர ஜெயின், பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்தார். அத்துறையில் நிலவிய ஊழலை சகித்துக்கொள்ள இயலாமல் பணியை ராஜிநாமா செய்தார். பின்னர் அரசியலில் நுழைந்தார்.
ஷாகுர் பஸ்தி தொகுதியில் பாஜக வேட்பாளர் சியாம் லால் கர்க்கை 7,062 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யேந்திர ஜெயின் தோற்கடித்தார்.
அண்ணா ஹசாரே தலைமையில் ஜன லோக்பால் மசோதாவுக்கு ஆதரவான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
சோம்நாத் பாரதி (39)
வழக்கறிஞராக பணியாற்றி வரும் சோம்நாத் பாரதி, மாளவியா நகர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிரண் வாலியாவை வீழ்த்தி சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளார்.
ஐ.ஐ.டி.யில் முதுநிலைப் பட்டமும், சட்டத்துறையில் பட்டமும் பெற்ற சோம்நாத் பாரதி, ஏழை எளியவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி நியாயம் கிடைக்க பாடுபட்டார். டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக 8 அப்பாவி சிறுவர்கள் மீது வழக்கு தொடர போலீஸார் முயன்றனர். அவர்களை காப்பாற்றியதில் சோம்நாத் பாரதி முக்கிய பங்காற்றினார்.
சவுரவ் பரத்வாஜ் (34)
பொறியாளரான சவுரவ் பரத்வாஜ், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் பாஜக வேட்பாளர் அஜய் குமார் மல்ஹோத்ராவை 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2005-ம் ஆண்டு ஏழைப் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து சமூகச் சேவையில் ஈடுபடத் தொடங்கினார்.
ராக்கி பிர்லா (26)
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சரவையில் மிகவும் இளைய வயது அமைச்சர் ராக்கி பிர்லா. ஒரே பெண் அமைச்சரும் இவர்தான்.
ஏற்கெனவே 4 முறை எம்.எல்.ஏ.வாகவும், பொதுப் பணித்துறை அமைச்சராகவும் இருந்த ராஜ்குமார் சவுகானை மங்கள்புரி தொகுதியில் 10,500 வாக்குகள் வித்தியாசத்தில் ராக்கி பிர்லா தோற்கடித்தார். தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ராக்கி பிர்லா, அந்த பணியிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தனக்கு ரூ. 51 ஆயிரத்து 150 மதிப்பிலான சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
துறைகள் ஒதுக்கீடு
டெல்லி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், அமைச்சர்களின் இலாகாக்கள் விவரங்களை அறிவித்தார்.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், உள்துறை, நிதி, மின்சாரம் ஆகிய துறைகளை தன் வசம் வைத்துக் கொண்டார். மணீஷ் சிசோடியாவிற்கு கல்வி, நகர்ப்புற வளர்ச்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன், வருவாய், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, கட்டிட வளர்ச்சித் துறை ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளன. ராக்கி பிர்லாவிற்கு குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை, மகளிர் பாதுகாப்பு மற்றும் மொழிகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கிரிஷ் சோனிக்கு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, நிர்வாக சீர்திருத்தம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகள் சோம்நாத் பாரதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சவுரப் பரத்வாஜிற்கு உணவு, விநியோகம், போக்குவரத்து, தேர்தல், சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சத்யேந்திர ஜெயினுக்கு சுகாதாரம், தொழில் மற்றும் குருத்வாரா (கோயில்) ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விரைவில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால், மேலும் சிலர் அமைச்சராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago