ஆதார்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஆதார் அட்டை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அட்டை திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ். செளகான், எஸ்.ஏ. போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதான மனுதாரரான கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.புட்டசாமி சார்பில் ஷியாம் தவான் ஆஜராகி வாதாடினார்.

ஆதார் அட்டைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான பரிந்துரையை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்னரே நிராகரித்துள்ளது.

ஆதார் அட்டைக்காக பொது மக்களிடமிருந்து பல்வேறு முக்கிய தகவல்கள் பெறப்படுகின்றன. அந்த ரகசிய தகவல்கள் வேறு நபர்களின் கைகளுக்கு கிடைக்காமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தவறிழைத்தால் என்ன தண்டனை என்பது குறித்தும் எந்த சட்ட விதிகளும் இல்லை என்று வழக்கறிஞர் ஷியாம் தவான் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், தனிநபர்களின் ரகசியத்தை காக்கும் உரிமையைவிட உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மிகவும் அவசியம். உணவுக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தனிநபர் ரகசியத்தை காக்கும் உரிமை குறித்து மக்கள் சிந்திக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் தங்களின் கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த விசாரணை டிசம்பர் 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் அண்மையில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ஆதார் அட்டை கட்டாயமில்லை, ஆதார் அட்டையை காரணம் காட்டி பொதுமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE