உம்மன் சாண்டி மீது கல்வீச்சு: கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள் எதுவும் இயங்காததால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, உம்மன் சாண்டி மீதான கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் 22 பேரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளான கேரள முதல்வர் உம்மன்சாண்டி, இடதுசாரிகள் வன்முறையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
'கேரள காவல் துறையின் சார்பில் தடகளப் போட்டியின் நிறைவு விழா கண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் உம்மன் சாண்டி கார் மீது இடதுசாரி முன்னணியினர் கல் வீசினர்.
இதில் கார் கண்ணாடி சேதமடைந்ததுடன், சாண்டியின் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்' என போலீஸார் தெரிவித்தனர்.
சோலார் பேனல் ஊழல் தொடர்பாக உம்மன் சாண்டியைக் கண்டித்து இடதுசாரி முன்னணியினர் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் உம்மன் சாண்டி, "வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியாது.
அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பகை இருக்கக்கூடாது. வன்முறையில் ஈடுபடுவதை இடதுசாரி கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.
இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.