ஹிட்லரின் உத்தியை கையாளும் பாஜக - மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

ஜெர்மனியில் நாஜிக்கள் ஆட்சியை வலுப்படுத்த அன்று ஹிட்லர் என்ன உத்தியைக் கையாண்டாரோ, அதே உத்தியை நரேந்திர மோடியும் கையாண்டிருப்பதாக சீதாராம் யெச்சூரி மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான “மக்கள் ஜனநாயகத்தில்” அவர் எழுதியுள்ள கட்டுரையில் பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

“உத்தரப் பிரதேசம், முசாபர்நகர் கலவரத்தால் உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் நேரத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது .

தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்திச் செல்ல வாஜ்பாய் போன்ற தலைவர்கள் தேவையில்லை என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டது. அதனால்தான், குஜராத் முதல்வர் மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் காப்பாற்ற வேண்டுமானால், தங்களின் மதவாதக் கொள்கையை பாஜக கைவிட வேண்டும். இல்லையெனில், பாஜகவின் தேசிய அரசியல் களம் ஒருபோதும் விரிவடையாது” என்று யெச்சூரி கூறியுள்ளார்.

சில வரலாற்றுச் சம்பவங்களை சுட்டிக் காட்டியுள்ள யெச்சூரி, பாஜகவையும், நரேந்திர மோடியையும் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

1933 பிப்ரவரி 27-ல் ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டடம் “ரிச்ஸ்டாக்” தீவைத்து எரிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு தீ வைத்தவர்கள் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஹிட்லரின் நாஜி படைகள்தான் இந்த சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை சுட்டிக் காட்டியுள்ள யெச்சூரி, அதே பிப்ரவரி 27, 2002-ல் குஜாத் மாநிலம், கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாஜிக்கள் ஆட்சியை வலுப்படுத்த அன்று ஹிட்லர் என்ன உத்தியைக் கையாண்டாரோ, அதே உத்தியை நரேந்திர மோடியும் கையாண்டிருப்பதாக யெச்சூரி மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

எதற்கெடுத்தாலும் சர்தார் பட்டேலுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசும் நரேந்திர மோடி, மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சர்தார் பட்டேல் தடை செய்ததை ஏனோ மறந்துவிடுகிறார் என்றும் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE