குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
சுமார் 10 லட்சம் பேரை அகமதாபாதில் ஒரே நாளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட வைத்ததன் பின்னணியில் இருப்பவர் ஹிர்திக் படேல் ஓர் இளைஞர்.
யார் இந்த ஹர்திக் படேல்? ஏன் போராட்டம்?
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஹர்திக் படேலைப் பற்றி அறிந்திருந்தோர் மிகவும் குறைவே. அகமதாபாத்தில் விரம்கம் என்ற ஊரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ஹர்திக் படேல். இவருக்கு வயது 22 என்றால் ஆச்சரியமாகக் கூட இருக்கும். இவ்வளவு இளம் வயதில் ஒரு சமூகத்தையே ஒன்று திரட்டும் அளவுக்கு அவர் பிரபலமாகியுள்ளார்.
படேல் சமூகத்தினர் அரசியல், பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த ஒரு சமூகமாகும். இவரது எழுச்சி, படேல் சமூகத் தலைவர்கள் நிரம்பிய பாஜக-வுக்கே தற்போது பெரிய தலைவலியாக எழுந்துள்ளது. குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல், கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்.சி.பால்டு ஆகியோர் படேல் வகுப்பைச் சேர்ந்தவர்களே.
ஜூலை மாத தொடக்கத்தில் படிதார் அனாமத் ஆந்தோலம் சமிதி என்ற அமைப்பை உருவாக்கினார். ஜூலை 6-ம் தேதி விஸ்நகர் பகுதியில் மிகப்பெரிய பேரணி ஒன்றை ஹர்திக் படேல் நடத்திக் காட்டினார். இந்தப் பேரணிக்குப் பிறகே நிறைய படேல் சமூக இளம்படையினர் இவருக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர்.
உள்ளாட்சி தேர்தல்கள் சமயத்தில் ஹர்திக் படேல் தலைமையில் படேல் சமூகத்தினர் மாபெரும் எழுச்சி கண்டது, ஆளும் கட்சிக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இது குறித்து அரசுத்துறை உயரதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) இதழிடம் கூறும்போது, “உள்ளாட்சி தேர்தலுக்கு 2 மாதங்கள் முன்னதாக ஹர்திக் தனது போராட்டங்களை தொடங்கினார், இவருக்கு ஆதரவாக பெருமளவு மக்கள் திரண்டதில் மாநில அரசுகளும், கட்சிகளும் ஆடிப்போயுள்ளன” என்றார்.
22 வயது படேலுடன் இணைந்த பெரும் இளைஞர் படை, மாநிலத்தில் நிலவும் அதிகப்படியான கல்விச் செலவுகள், குறைந்த அளவிலான அரசுப் பணிகள், மற்றும் பிற காரணங்களினால் கடும் கோபமடைந்து எழுச்சி கண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை மூலம் படேல் சமூகத்தினரை ஒன்று திரட்டி திடுக்கிட வைத்தார் ஹர்திக் படேல்.
“எங்கள் சமூகத்தின் குறைகளை தீர்க்கும் தலைவர்கள் இல்லை என்பதை ஹர்திக் உணர்ந்தார். தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் அரசியல் கட்சிகளுடன் பிணைந்துள்ளனர். அவர்களால் சமூக விவகாரங்களை எழுப்ப முடியவில்லை” என்று வருண் படேல் என்ற உறுப்பினர் கூறுகிறார்.
கிராமத்திலிருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சூரியகாந்த் படேல் என்பவர் கூறும்போது, "படேல் சமூகத்தினர் கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தனர், ஆனால் ஒருவரும் போராட்டத்துக்கு முயற்சி எடுக்கவில்லை, தற்போது ஹர்திக் படேல் எடுத்துள்ளார்" என்றார்.
இந்தப் போராட்டங்கள் குறித்து பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, “மாநிலத்தின் தலைமைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது, காரணம் மாநிலத் தலைமை படேல் சமூகத்தினரின் ஆதரவை உத்தரவாதமாக எடுத்துக் கொண்டுவிட்டனர், இதே சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் சுயநிதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற வணிக நலன்களை பிரதானமாகக் கொண்டுள்ளனர்” என்றார்.
"நான் ஹர்திக்கை சந்தித்தது இல்லை, அதனால் அவரை எனக்கு தெரியாது. ஆனால் நான் சூரத்திலிருந்து இங்கு அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே வந்துள்ளேன். ஏனெனில் அவர் நல்லதுக்காக போராடுகிறார்" என்று சூரத்தில் டெக்ஸ்டைல் வர்த்தகம் செய்யும் மனோஜ் படேல் என்பவர் கூறினார்.
எளிமையான தோற்றத்துடன், அனைவரும் அணுகக் கூடிய விதத்தில் பழகுபவர் ஹர்திக், லட்சிய தாகமும் ஆற்றலும் உள்ளவர் கடந்த 50 நாட்களாக அவர் செல்லாத ஊர்களும் கிராமங்களும் இல்லையென்றே கூறிவிடலாம் என்று படேல் சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவர் தெரிவித்தார்.
செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் ஹர்திக் பேசும்போது, “மாநில அரசு நம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை எனவே ஜந்தர் மந்தருக்கு போராட்டத்தை நகர்த்திச் சென்று நமது கோரிக்கைகளை முன்வைப்போம்” என்றார்.
அவர் அந்த கூட்டத்தில் மேலும் தெரிவிக்கும் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிஹாரின் நிதிஷ் குமார், ஆகியோரும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. நாட்டின் 8 மாநிலங்களில் படேல் சமூகத்தினரின் எண்ணிக்கை 27 கோடி என்றார். அதாவது தான் நினைத்தால் போராட்டத்தை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று எச்சரிக்கும் விதமாக அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
இங்கு நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்வது நலம், 1981 மற்றும் 1985-ம் ஆண்டுகளின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்பாட்டங்களை பெரிய அளவில் நடத்தியவர்களும் இதே படேல் சமூகத்தினரே. தலித்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடை இவர்கள் கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர்.
பொதுவாக இளம் வயதிலேயே வர்த்தகத் துறைக்கு வந்து விடும் படேல் சமூகத்தினர் தற்போது பொறியியல், மருத்துவப் படிப்புகளிலும் தங்கள் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று உணரத் தொடங்கியுள்ளனர். மேலும், அவர்களது பாரம்பரிய வர்த்தகமும் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
உதாரணமாக படேல் சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வைரக்கற்கள் தொழிற்துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் சுமார் 150 வைரக்கற்கள் யூனிட்கள் மூடப்பட்டன, சுமார் 10,000 பேர் வேலையிழந்தனர்.
குஜராத் அரசியலில் இந்த ஹர்திக் படேலின் இயக்கம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று பலதரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago