ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய நீதிபதி நியமனம்
கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். மீண்டும் ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க அவர் விரும்பாததால், புதிய நீதிபதியை நியமிக்க கர்நாடக அரசு தீவிரம் காட்டியது.
பல்வேறு நீதிபதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எச்.வஹேலாவிடம் கொடுத்து கர்நாடக அரசு பரிசீலனை செய்து வந்தது.
நீதிபதி மாலதி, சிக்கன்ன கவுடர், சோமராஜய்யா, ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஆகியோர் அடங்கிய இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்பட்டியலில் இருந்து புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி'குன்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கத்தோலிக்க கிறிஸ்தவர். 47 வயதான நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா மிகவும் கண்டிப்பானவர். பெல்காம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்திலும் மிகவும் நேர்மையாக பணியாற்றி இருக்கிறார். இவருக்கு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டதால் மாநிலம் முழுவதும் பரவலாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவருக்கு பெங்களூர் லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் வாய்ப்பு தேடி வந்தது. அங்கும் சிறப்பாக பணியாற்றியதால் கர்நாடக லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றங்களின் பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவரை ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு சிறப்பு நீதிபதியாக கர்நாடக அரசு நியமித்திருக்கிறது.