தெலங்கானா எதிர்ப்புப் போராட்டம்: விஜயநகரத்தில் கண்டதும் சுட உத்தரவு
அத்துடன், விஜயநகரில் வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுடுவதற்கு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு, மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு எதிராக, ஆந்திரத்தின் சீமாந்திரா பகுதிகளில் கடுமையான போராட்டம் தொடர்ந்துள்ளது.
ஆந்திரத்தின் கடற்கரை நகரான விஜயநகரத்தில், இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வெளியிட்ட வடக்குக் கடற்கரை மண்டல ஐ.ஜி.பி. துவாகரா திருமலை, விஜயநகரில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு வங்கிக்கு தீ வைத்துள்ளனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர் வன்முறையின் காரணமாக சனிக்கிழமை இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
சீமாந்திராவில் வரலாறு காணாத பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வன்முறையைத் தடுத்த போலீஸாரில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் முழு அடைப்பு போராட்டங்களால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.