பைலின் புயல் முழுமையாகக் கரையைக் கடக்க, 6 மணி நேரம் ஆகும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பைலின் புயல் தாக்கியதன் காரணமாக, சுமார் 200 கி.மீ. வேகத்தில் கடலோரப் பகுதிகளில் காற்று வீசிவருகிறது. சூறைக்காற்றின் வேகம் 210 முதல் 215 கி.மீ. வரையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலக் கடலோரப் பகுதிகளில் பைலின் புயலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது.
பைலின் புயலின் தாக்கம் காரணமாக, ஒடிசா மற்றும் வடக்குக் கடலோர ஆந்திரத்தில் கனமழை பெய்து வருகிறது.
ஒடிசா மற்றும் வடக்குக் கடலோர ஆந்திரத்தில் அடுத்த 12 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை நீடிக்கும் என இந்திய வானிலை மைய இயக்குனர் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
18 ஹெலிகாப்டர், 12 விமானப் படை விமானங்கள் மற்றும் 2 கப்பல்களை மீட்புப் பணிகளுக்காகத் தயார் நிலையில் வைத்துள்ளது அரசு.
பைலின் புயல் தாக்குவதற்கு முன்பாகவே கன மழை மற்றும் சூறாவளிக் காற்றின் விளைவாக, ஒடிசாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜார்கண்டிலும் உஷார் நிலை: பைலின் புயல் காரணமாக ஜார்கண்டிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரென் தெரிவித்துள்ளார்.
5 லட்சம் பேர் அகற்றம்: ஒடிசா, ஆந்திரம் மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் இருந்து 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில், 4 மாவட்டங்களில் 3,60,000 பேரும்; கடலோர ஆந்திராவில் 85,000க்கும் அதிகமானோரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.