பெட்ரோல் விலை குறையும்: மொய்லி சூசகம்

By செய்திப்பிரிவு

பெட்ரோல் விலை குறைப்பு குறித்து அடுத்த சில நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி சூசகமாகத் தெரிவித்தார்.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல் விலை குறித்த அடுத்த அறிவிப்பு செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

தற்போது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஓரளவுக்கு மேம்பட்டிருப்பதால் பெட்ரோல் விலை குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போதும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சீரடையும்போதும் அதன் பயன்கள் நுகர்வோருக்கு நேரடியாக சென்றடையும் என்றார்.

எண்ணெய் நிறுவனங்கள் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடவுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை குறைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“அப்படி நடக்கும்” என்றே நம்புகிறேன் என வீரப்ப மொய்லி கூறினார். பெட்ரோல் விலை எப்போதும் நிலையாக இருப்பதில்லை, இறக்குமதி விலை உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மே மாதத்தில் ரூ.1 முதல் ரூ. 3 வரை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அதன்பின்னர் ஏறுமுகமாகவே இருக்கும் பெட்ரோல் விலை எவ்வளவு குறையும் என்று எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE