ஜெயலலிதா ஊதுபத்தி உருட்டவில்லை: கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெய் சிம்ஹா பேட்டி

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஊதுபத்தி உருட்டும் வேலை வழங்க வில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு எந்த வேலையும் ஒதுக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்ஹா கூறியுள்ளார்.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட தினத்தில் இருந்து அவரது உடல்நிலை குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளி யாகி வருகின்றன. இது தொடர்பாக உண்மை நிலையை அறிவதற்காக கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி. எம்.ஜெய்சிம்ஹாவிடம் ‘தி இந்து' சார்பாக பேசினோம். அவர் கூறிய தாவது:

‘‘ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். தினமும் 3 முறை அவரது உடல்நிலையை சிறை மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனர். சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் வழக்கம்போல் இருக்கிறது. அவருக்கு தேவைப்படும் மருந்துகளை அனுமதித்திருக்கிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எளிய உணவையே உட்கொள்கிறார். சிறப்பு உணவு வகைகள் அவருக்கு வழங்கப்படவில்லை.

தினமும் நானும் இணை டி.ஐ.ஜி. கே.வி.ககன் தீப்பும் அவரது அறையைப் பார்வையிடுகிறோம். தனக்கு எத்தகைய சிறப்பு ஏற்பாடுகளும் செய்து தர வேண்டாம் என ஜெயலலிதா எங்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவரை பற்றி ஊடகங்களில் ஊகங்களின் அடிப்படையில் பல பொய்யான செய்திகள் வெளியாகின்றன.

ஓய்வு எடுக்கிறார்

ஜெயலலிதா சிறையில் ஊதுபத்தி உருட்டுகிறார். காய்கறி நறுக்கிறார் என தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் வருமான வரி செலுத்தும் மூத்த குடிமகள். எனவே சிறையில் அவருக்கு எந்த வேலையும் ஒதுக்கவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முழுமையான ஓய்வெடுக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார். சிறைத்துறை நிர்வாக விதிமுறைகளின்படி விஐபி கைதி களுக்கு பணி ஒதுக்கமாட்டோம். அதைத்தான் ஜெயலலிதா விஷயத்திலும் பின்பற்று கிறோம். சசிகலா, இளவரசி ஆகியோரும் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை.

ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருக்கும் விஐபி கைதிகளுக்கு அவர்களது வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில பணிகள் வழங்கப் படும். இதற்கான பட்டியல் சிறைத் துறையிடம் இருக்கிறது. ஆனால் அந்த பட்டியல் குறித்துக்கூட ஜெயலலிதாவிடம் தெரிவிக்கவில்லை என்பதே உண்மை'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE