மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவில் வாபஸ் இல்லை: லாலு கட்சி
அந்த கட்சியின் துணைத் தலைவர் ரகுவம்ச பிரசாத் சிங், பாட்னாவில் பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறிய தாவது:
"தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த அவசரச் சட்டம், லாலு பிரசாத் யாதவை காப்பாற்றுவதற்காகத்தான் எனக் கூறப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களில் பிகாரில் காங்கிரஸை எதிர்த்துத்தான் போட்டியிட்டோம். இந்நிலையில், அவர்களின் (காங்கிரஸ்) உதவியை நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?
இந்த அவசரச் சட்டத்துக்கு அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கும் என நீங்கள் கருதினால், அது ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத்தை காப்பாற்று வதற்காகத்தான் இருக்கும். அவசரச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை கைவிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு, அதன் உள் விவகாரமாகும். அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை" என்றார்.
மத்திய அரசுக்கு வெளியிலிருந்து அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவீர்களா என கேட்ட போது, "மக்களவையில் எங்களுக்கு வெறும் 4 எம்.பி.க்களே உள்ளனர். மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்காகத்தான் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம். அதிலிருந்து எதற்கு நாங்கள் பின்வாங்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார் ரகுவம்ச பிரசாத்.