பிரதமர் நரேந்திர மோடி நேற்று காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பனிச்சிகர முகாமில் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.
பின்னர் ஸ்ரீநகரில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த அவர், அந்த மாநிலத்துக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.745 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
வடமாநிலங்களில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைச்சிகரத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்றார். உலகின் மிக உயரமான போர்க்களமான அங்கு வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
பிரதமராகப் பதவியேற்ற பிறகு எனது முதல் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாடு முழுவதும் 125 கோடி இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
அவர்கள் தங்கள் வீடுகளில் நிம்மதியாக வாழ்வதற்கு 24 மணி நேரமும் எல்லையை பாதுகாக்கும் நீங்கள்தான் (வீரர்கள்) காரணம். நாட்டுக்காக நீங்கள் செய்யும் தியாகத்துக்கு ஈடு இணையே இல்லை.
முன்னறிவிப்பின்றி இங்கு திடீரென வந்துள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் வருவதற்கு முன்அறிவிப்பு தேவையில்லை என்று கருதுகிறேன். இந்த இனிய நாளில் இங்கிருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதைத் தொடர்ந்து ராணுவ வீரர் களுக்கு அவர் தீபாவளி பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கினார்.
சியாச்சின் பயணம் குறித்து ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
சியாச்சின் பனிமுகட்டில் பணியாற்றும் நமது வீரர்கள் கடும் குளிர், மிக உயரமான மலை முகடுகள் என எதையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் நம் நாட்டையும் நாட்டு மக்களையும் தலைநிமிரச் செய்துள்ளனர்.
அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு தாய்நாட்டை பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்கள் வெறும் வீரர்கள் அல்ல, புனிதர்கள். இந்திய மக்கள் அனைவரும் நமது வீரர்களுடன் தோளோடு தோள் நிற்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரூ.745 கோடி நிதியுதவி
சியாச்சினில் இருந்து ஸ்ரீநகர் சென்ற பிரதமர் மோடி, மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவை சந்தித்து வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் மோடி கூறும்போது, ஜம்மு-காஷ்மீரில் மழை வெள்ளத்தால் ரூ.44 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே உடனடி நிவாரண நிதியாக சேதமடைந்த வீடுகளைக் கட்ட ரூ.570 கோடியும் மருத்துவ மனைகளை சீரமைக்க ரூ.175 கோடியும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் காஷ்மீரில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த மாநிலத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.1000 கோடியை வழங்கினார்.
மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1100 கோடியை பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது ரூ.745 கோடி நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago