வட மாநில கள்ளத் துப்பாக்கி கலாச்சாரமும் பின்னணியும்

By ஆர்.ஷபிமுன்னா

பீகாரின் முங்கேரில் 450 கள்ளத் துப்பாக்கிகளும், அதன் எல்லையை ஒட்டி இருக்கும் மேற்கு வங்கத்தில் 1,500 கள்ளத் துப்பாக்கிகளும் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன. மூன்று பேர் கைது செய்யபபட்டுள்ளனர்.

இந்தச் செய்தி தமிழகத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியானதாக இருக்கலாம். ஆனால், வட மாநிலங்களில் இதுபோன்ற செய்திகள் மிகவும் சாதாரண விஷயம்.

உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கள்ளத் துப்பாக்கிகள் அடிக்கடி பிடிபடுவது அன்றாட செய்திகளில் ஒன்று. இந்த மாநிலங்களில் அடிக்கடி சிக்கும் கள்ள கைத்துப்பாக்கிகளை, இந்தியில் 'தமன்ச்சா' அல்லது 'கட்டா' என அழைக்கிறார்கள்.

குறிப்பாக இவை, பீகார் மாநிலத்தின் முங்கேர், நாளந்தா மற்றும் கயா மாவட்டங்களில் அதிகமாக செய்யப்படுகிறது. உ.பி.யில் அலிகர், ஏட்டா, மீரட், முசாபர்நகர், ஆசம்கர் மற்றும் ஜான்சி மாவட்டங்களிலும், ம.பி. மாநிலத்தில் சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மொரேனா, பிந்த் மற்றும் குவாலியர் ஆகிய இடங்களிலும் கள்ளத் துப்பாக்கிகள் செய்யப்படுகின்றன.

இவற்றில் ஒரே ஒரு குண்டை மட்டும்தான் 'லோட்' செய்து சுட முடியும். மறுமுறை சுட, மீண்டும் குண்டை லோட் செய்ய வேண்டும். மிகவும் இறுக்கமாக இருக்கும் இதன் டிரிக்கர்களை இயக்குவதும் கடினம். இந்த வகை கைத்துப்பாக்கிகள் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் இதற்கு, நல்ல மார்கெட் உள்ளது. ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான விலையில் கிடைக்கும் இந்த கைத்துப்பாக்கிகள்தான் வட மாநிலங்களில் கிரிமினல் குற்றங்கள் நடைபெற முக்கியக் காரணமாக உள்ளது.

முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்

தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் புள்ளி விவரத்தின்படி 2012-ல் லைசென்ஸ் கொண்டவை மற்றும் கள்ளத்துப்பாகியால் சுட்டு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3781. இதில் கள்ளத்துப்பாக்கிகளில் பலியானவர்கள் மட்டும் 3458. அதிலும் உ.பி.யில் மட்டும் எனப் பார்த்தால் அங்கு மிக அதிகமாக 1575. இரண்டாவதாக பீகாரில் 682, மூன்றாவது இடத்தில் மேற்கு வங்காளம் 269, நான்காவதாக ஜார்கண்ட் 206, ஐந்தாவதாக ம.பி. 169, ஹரியானா 101, ராஜஸ்தான் 62, டெல்லி 60, சத்தீஸ்கர் 54, உத்தராகண்ட் 49 மற்றும் ஜம்மு-காஷ்மீர் 30.

இதற்கு அடுத்தபடியாக மாநிலங்களில் 20 தென் இந்தியாவில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் 3 மட்டுமே. புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒன்று கூட இல்லை. ஆந்திராவில் 13 பேர் கள்ளத்துப்பாக்கிகளால் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை பீகாரில் 2010-ல் 684 மற்றும் 2011-ல் 500 என ஏற்ற இறக்கத்தில் இருப்பினும், உ.பி.யில் மட்டும் 2011-ல் 1049, 2010-ல் 778 என மிக அதிகமாக ஏறிக் கொண்டு செல்கிறது. இதுவன்றி ஆயுதம் சம்மந்தபட்ட வழக்குகள் மட்டும் என எடுத்துக் கொண்டால், உ.பி. மாநில காவல்துறையின் ஒரு புள்ளி விவரம் நமது தலையை சுற்ற வைக்கும். 2008 ஆம் ஆண்டு 47,725 இதற்கு மறு வருடம் பெருகிய ஆயுத வழக்குகள் எண்ணிக்கை 53,141.

முக்கிய ஆயுதம் ஆனது எப்படி?

'உங்கள் தமிழகத்தில் பிரச்சனை எனில் பொதுமக்கள், கத்தி அல்லது வீச்சரிவாளை எடுப்பார்கள் எனவும், மாணவர்கள், ஹாக்கி மற்றும் கிரிக்கெட் பேட் அல்லது கருங்கற்களையும் எடுத்து வீசுவதாகச் செய்திகளில் படித்திருக்கிறோம். இந்த நிலை, வட இந்தியாவில் 1980-கள் வரை இருந்தது. பிறகு யாராக இருந்தாலும் குற்றங்களுக்காக கையில் எடுக்கும் குறைந்தபட்ச ஆயுதமே கைத்துப்பாக்கிகள்தான் என்றாகி விட்டது.

இவற்றை அறிமுகப்படுத்தியது பீகார் எனினும், உ.பி.யில் இது மதக்கலவரங்களுக்கு பெயர் போன அலிகரில் இருந்தும் பரவத் துவங்கின. பூட்டு தொழிலுக்கும் பெயர் போன இந்த நகரில் அந்த உபகரணங்களை வைத்து பூட்டு செய்யும் தொழிலாளர்களில் பலர் துப்பாக்கிகளையும் எளிதாக செய்யத் தெரிந்து கொண்டனர். பல வருடங்களாகப் பழகிய பக்கத்து வீட்டு நண்பர்களாலும் மதக்கலவர சமயங்களில் பல சமயம் ஆபத்துக்கள் இருந்தன. இதனால், பலரும் பாதுகாப்பு வேண்டி கள்ளக் கைத்துப்பாக்கி உதவியை நாடத் துவங்கினர்.

பிறகு, இதை கிரிமினல்கள் மற்றும் அரசியல்வாதிகளும் தங்கள் முக்கிய ஆயுதமாக கையில் எடுக்க மாநிலம் முழுவதும் சரளமாக புழங்கத் துவங்கி விட்டது. இவை வெளி மாநிலங்களுக்கும் இடைத் தரகர்கள் மூலமாக கடத்தப்பட்டு வருகிறது. ஓர் அவசர தேவைக்காக சில போலீசாரே கள்ளத்துப்பாக்கி செய்பவர்களை அணுகுவதும் உண்டு. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தும் அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதால் கைதாகும் குற்றவாளிகளுக்கு மறுதினமே பெயில் கிடைத்து விடுகிறது' என 'தி இந்து' நாளிதழிடம் ஓர் அறிமுகத்துடன் நம்மிடம் பேசியவர், உ.பி. மாநிலம் அலிகரின் கிரிமினல் வழக்கறிஞரான கஜேந்திரகுமார்.

எங்கே தயாரிக்கப்படுகின்றன?

உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள மீரட்டில் ஜனவரி 9, 2010-ல் ஒரு காரை சோதனையிட்ட போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், வெளிநாட்டு தயாரிப்புகளின் காப்பிகளாக செய்யப்பட்ட 33 பிஸ்டல் மற்றும் 66 மேகசின்கள் பிடிபட்டன. இதற்கு முந்தைய வருடம் அருகிலுள்ள நகரான பரேலியில் ஜனவரி, 30-ல் ஒரு சஃபாரி வண்டியை மடக்கி நடந்த சோதனையில் 48 பிஸ்டல் மற்றும் 97 மேகசின்ஸ் பிடிபட்டன. 'மேட் இன் இத்தாலி' என முத்திரையிடப்பட்டிருந்த அவைகளை மீரட்டிற்குக் கடத்தி சென்று கொண்டிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 20,000 துப்பாக்கிகளுக்கான ஆர்டர் தங்களிடம் இருப்பதாக போலீசாரிடம் கூறினர். இதற்கு நான்கு நாட்கள் முன்னதாக நேபாள எல்லையில் உள்ள கோரக்பூரில் .32 ரிவால்வர் இரண்டு, 9 எம்.எம் பிஸ்டல்கள் நான்கு, இந்த துப்பாக்கிகளின் 100 குண்டுகள் மற்றும் ஏகே-47 வகை துப்பாக்கியின் 49 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதை விற்க வந்த ஒருவர் மற்றும் வாங்க வந்த இருவரும் கைது செயப்பட்டனர்.

இவற்றுக்குள்ள ஒற்றுமை என்னவெனில், பிடிப்பட்ட அனைத்தும் பீகாரின் முங்கேர் எனும் மாவட்டத்திலிருந்து கடத்தி வரப்பட்டவை. கைது செய்யப்பட்டவர்கள் பீகார் மற்றும் உ.பி.யை சேர்ந்தவர்கள். இதேபோல், மும்பையில் 'டி' சீரிஸ் கேசட்டின் உரிமையாளர் ஷா, நிழல் உலக தாதாக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட கள்ளத்துப்பாக்கி உபியின் ஆசம்கரில் தயாரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தேர்தல்களின்போது சூடுபிடிக்கும் மார்க்கெட்

இது குறித்து நாம் உபியின் வாரணசி பகுதியின் ஐஜியான பிரகாஷ்.டி ஐபிஎஸ் தி இந்து நாளிதழிடம், 'சாதாரணமாகவே வட மாநிலங்களில் லைசென்ஸ் துப்பாக்கிகள் வைத்திருப்போர் அதிகம். இவை, தேர்தல் சமயங்களில் அரசிடம் ஒப்படைக்க வேண்டி இருப்பதால், கள்ளத்துப்பாக்கிகளுக்கு தேர்தல் காலங்களில் மார்க்கெட் கூடி விடுகிறது. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான குண்டுகள் லைசென்ஸ் துப்பாக்கிகளுக்குரியது. இதை வாங்குபவர்கள் தாங்கள் குண்டுகள் பயன்படுத்தியது குறித்து அரசிடம் கணக்கு காட்ட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.

இவை மீறப்படுவதால் அவை எளிதாக கள்ள மார்கெட்டுகளில் கிடைத்து விடுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் உறைகளில் மீண்டும் மருந்துகளை அடைத்து இரட்டைக்குழல் கள்ளத் துப்பாக்கிகளில் மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஒருமுறை கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருந்து பிடிபடுபவர்களையும் நாம் தொடர்ந்து கண்காணித்து கொண்டுதான் இருக்கிறோம். இதன் காரணமாகத்தான் துப்பாக்கிகளை வெளிமாநிலங்களுக்கு கடத்துவது அதிகமாகி விட்டது. இந்தக் குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்கி, வழக்குகளை விரைந்து முடித்தால்; கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஒரு முடிவு கட்டலாம்' எனக் கருத்து கூறுபவர், அலிகரில் டிஐஜியாக பணியாற்றிய திருநெல்வேலியை சேர்ந்த தமிழர்.

200 ஆண்டு கால வரலாறு

உ.பி. அளவுக்கு ம.பி. மாநிலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் இல்லை என்பதால், அங்கு சாதாரண கைத்துப்பாக்கிகளே தயாரிக்கப்படுகிறது. இவற்றை சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளையர்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகக் கருதப்படும் பீகாரின் முங்கேருக்கு 200 ஆண்டு கால ஒரு வரலாற்று காரணம் உண்டு.

இந்தப் பகுதியை 18 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தை ஆட்சி செய்த நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் படைத் தளபதியான மீர்காசிம் முங்கேரில் இருந்தார். அப்போது முங்கேரில் காசிம் கட்டிய கோட்டையில் ஆயுதங்களையும் செய்வதற்காக ஆப்கானில் இருந்து ஆட்களை கொண்டு வந்தார். அவருக்குப் பின் ஆங்கிலேயர்களும் தொடர்ந்த இந்த துப்பாக்கி தொழிற்சாலையில் தற்போது 34 யூனிட்கள் மட்டும் மத்திய அரசின் கீழ் இன்றும் இயங்கி வருகிறது. முதலாம் உலக போரின் போதுதான் முங்கேரில் துப்பாக்கி தயாரிப்புகள் முதல் முதலில் வெளி உலகிற்கு வந்தது.

1962-ல் வந்த சீனப்போரின் போது நம் ராணுவத்திற்கு அதிகமாக தேவைப்பட்ட '410 போர்' அளவுள்ள துப்பாக்கிகள் முங்கேரின் துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரானது. இதன் காரணமாக, அந்த தொழிலை கற்றுத் தேர்ந்தவர்கள் இன்றும் வழி, வழியாக பல குடும்பங்களில் தொடர்கின்றனர். இவர்களில் வேலை கிடைக்காதவர்கள் மற்றும் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையுள்ளவர்களும் சட்ட விரோதமாக கள்ளத்துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிலில் இறங்கி விட்டனர்.

இதனால், நம் நாட்டிலேயே முங்கேர்தான் முதன் முதலில் குடிசைத் தொழிலாக கள்ளத்துப்பாக்கிகள் தயாரிக்கும் நகரமானது. துவக்கக் காலங்களில் பீகாரில் மட்டும் சப்ளை செய்யப்பட்ட இந்த துப்பாக்கிகள் வெளிமாநிலங்களுக்கும் சப்ளையானது. இதில் மேலும் முன்னேற்றம் கண்டுள்ள முங்கேரில், நவீனரக கள்ளத் துப்பாக்கிகளும் தயாராகத் துவங்கி விட்டன. தற்போது இவை, நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக டெல்லியில் இந்தியன் முஜாகித்தீனை சேர்ந்தவர்களிடமும், ஜம்மு-காஷ்மீரில் ஹிஜுபுல் முஜாகித்தீன்களிடமும், ஒடிசா மற்றும் ஜார்கண்டின் நக்சலைட்டுகளிடமும் முங்கேரில் தயாரிக்கப்பட்ட கள்ளத் துப்பாக்கிகள் பிடிப்பட்டன. இதை ஆமோதிக்கும் வகையில் தி இந்து நாளிதழிடம் பேசியவர்கள் பீகாரின் மூத்த பத்திரிகையாளர்கள்.

சப்ளை செய்வது எப்படி?

'இங்கு செய்யப்படும் நவீனரக கள்ளத் துப்பாக்கிகள், 'மேட் இன் இங்கிலாந்து', 'மேட் இன் யு.எஸ்.ஏ' என பல வெளிநாட்டு முத்திரைகளுடன் முங்கேரிலேயே தயாரிக்கப்பட்டு அவை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கப்படுகிறது. இதற்கான மேகசின்(குண்டுகள்)களும் தயாரிக்கப்படுவதால் குண்டுகள் தட்டுப்பாடு என்ற பிரச்சனையும் இல்லை. இவை, நக்சல் மற்றும் தீவிரவாதிகள் உட்பட வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்ல பெண்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

'கூரியர்ஸ்' என அழைக்கப்படும் இவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் முங்கேரில் மட்டும் 600 பேர் பிடிபட்டுள்ளனர். 2005-ல் ஒருமுறை முங்கேரின் ஒரு தேசிய வங்கியில் ரஞ்சித் கோஸ்வாமி என்பவரின் சேமிப்புக் கணக்கில் ரூபாய் 10,000 முதல் 40,000 வரையிலான தொகை அவ்வப்போது டிபாசிட் செய்யப்பட்ட வெளிமாநில நகரங்களின் பட்டியலில் சென்னையும் இருந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது டெல்லி, ஹரியாணா, ம.பி., ஒடிஷா, உ.பி., பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் தமிழகத்திற்கும் கள்ளக் கைத்துப்பாக்கிகள் சப்ளை செய்ததாக ஒத்துக் கொண்டார்' என அதிரடி தகவல் தருகின்றனர்.

முங்கேரியில் இருந்து 'யு.எஸ்.ஏ.' வரை

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்காவின் அருகில் கடந்த வருடம் ஜூலை மாதம் சந்தேகத்திற்கிடமாக சென்ற ஒரு அம்பாசிடர் காரை சோதனையிட்டபோது 99 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் 198 மேகசின்கள் பிடிபட்டன. இவை முங்கேரில் செய்து கடத்தி வரப்பட்டதாக கைது செய்யப்பட்ட நிரஞ்சன் மிஸ்ரா மற்றும் பெரோஸ் ஆலம் ஆகியோர் தகவல் அளித்தனர். ஆறு குண்டுகள் லோட் செய்து சுடும் நவீனரகத்தை சேர்ந்தவைகளான இவற்றில் 'மேட் இன் யூ.எஸ்.ஏ', 'ஆர்மி சப்ளை ஒன்லி' என வாசகங்களும் பதிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற கள்ளத்துப்பாக்கிகள் இந்த வருடம் இதுவரை டெல்லி போலீசாரிடம் பிடிப்பட்டவை 246. கடந்த வருடம் இவை 728.

இது குறித்து முங்கேரில் மாவட்டக் காவல்துறை தலைமை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தமிழரான கண்ணன், ஐ.பி.எஸ் 'தி இந்து' நாளிதழிடம் கூறுகையில், 'இந்த மாவட்டத்தின் முக்கியப் பிரச்சனையே கள்ளத் துப்பாக்கிகள் தயாரிப்புதான். இவர்களின் பரவிய நெட்வொர்க்கை சமீப காலமாக தீவிரமாகக் கண்காணித்து பிடித்து வருகிறோம். கடந்த வருடம் இந்த வகையில் 55 பேர் பிடிபட்டனர். இதனால், பாகங்களை அருகிலுள்ள மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் செய்து முங்கேரில் பிட்டிங் மட்டும் செய்து துப்பாக்கிகளை உருவாக்கும் புது டிரண்ட் ஆரம்பித்துள்ளனர்.

இவற்றை ஒரு தனி ஆளாகவே வயல்வெளிகள் மற்றும் காடுகள் போன்ற இடங்களில் மறைந்து இருந்து செய்து விடுகிறார்கள். இதை ஆற்றின் படகுகளிலும் அமர்ந்தபடியும் செய்து விடுகிறார்கள். பிடிக்க வரும்போது அவைகளை ஆற்றில் வீசி எறிந்து விட்டு தப்பி விடுகிறார்கள். இவற்றை முறியடிப்பதற்காக பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள முக்கியமான 100 வழக்குகளை தேர்வு செய்து ஃபாஸ்ட் டிராக் நீதிமன்றங்களில் விசாரித்து வருகிறோம். இதன் மூலம் தீர்ப்புகள் தாமதமாகாமல், சில மாதங்களில் வெளியாகும். அதில் கிடைக்கும் தண்டணைகளின் தாக்கம், குற்றவாளிகளிடையே ஒரு நல்ல மனமாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவை வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படாமல் இருக்க வேண்டி மாவட்ட போலீசார் மட்டுமன்றி ஜி.ஆர்.பி எனும் ரயில்வே போலீசாரும் அதிக அளவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வட இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் கள்ள கைத்துப்பாக்கிகள் செய்யப்படுவதால், தமிழகத்தில் பிடிபட்டவை முங்கேரிலிருந்து சென்று இருக்கக் கூடும் எனக் கருத முடியாது. இது குறித்து தமிழக போலீசார் விசாரணைக்காக வந்தால் பீகாரில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கண்டிப்பாகக் கிடைக்கும்' என உறுதி கூறிய தமிழர் தற்போது பீகார் காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றுகிறார்.

வட மாநிலங்களில் நடக்கும் 90 சதவீத குற்றங்களுக்கு காரணம் கள்ளத் துப்பாக்கிகளே. சென்னையில் கைப்பற்றப்படும் சாதாரண கள்ள கைத்துப்பாக்கிகள் வந்த வேரைக் கண்டுபிடித்து அறுப்பது அவசியம். இல்லையெனில், நவீனரக துப்பாக்கிகளும் இங்கு நுழைந்து வட மாநிலங்களை போல் தமிழகமும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு பலியாகி விடும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்