உத்தராகண்ட் ஆளுநர், முதல்வருடன் கேதார்நாத் கோயிலில் மோடி வழிபாடு: 20 நிமிடங்கள் வரை பூஜை

இமயமலையில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் சிவன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்றான கேதார்நாத் சிவன் கோயில் இமயமலை தொடரில் அமைந்துள்ளது. பாண்டவர்களால் கட்டப்பட்டு, ஆதிசங்கரரால் இக் கோயில் புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் கடந்த 1989-ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் வழிபாடு நடத்தினார். 28 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் ஒருவர் கேதார்நாத் கோயிலுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். .

தனி ஹெலிகாப்டரில் உத்தரா கண்ட் ஆளுநர் கே.கே.பால், முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் ஆகியோருடன் சென்ற பிரதமர், கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலி பேட்டில் தரையிறங்கினார்.

அங்கிருந்து கார் மூலம் கோயிலுக்கு சென்றடைந்தார். அவரை அர்ச்சகர்கள் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் மூலவருக்கு ருத்ராபிஷேகம் செய்து பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

சுமார் 20 நிமிடங்கள் வரை பூஜை நடத்திய பிரதமர், பின் கோயிலுக்கு வெளியே வந்து நந்தி சிலையையும் வணங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்களையும், பொதுமக்களையும் பார்த்து கை அசைத்தார். கோயில் சார்பில் ருத்ராட்சம், மரத்தில் செதுக்கப்பட்ட கோயிலின் உருவம், இமயமலை தொடர்பான புத்தகங்கள் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டன.

2013 வெள்ளப்பெருக்கின்போது மலையில் இருந்து உருண்டோடி வந்து கோயிலை சேதத்தில் இருந்து காப்பாற்றியதாக நம்பப்படும் பீமன் பாறை தற்போது கோயிலின் பின் பகுதியில் அமைந்துள்ளது. அந்த பாறையையும் பிரதமர் மோடி வணங்கினார். சுமார் ஒரு மணி நேரம் வரை பிரதமர் கேதார்நாத் கோயிலில் இருந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் வாகனம் மூலம் ஹெலிபேடுக்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹரித்வாருக்கு புறப்பட்டுச் சென்றார்.

பத்ரிநாத்தில் பிரணாப்

கேதார்நாத் கோயில் ஏப்ரல் மாதத்தில் வரும் அட்சய திருதியை நாளில் திறக்கப்பட்டு தீபாவளி வரை திறந்திருக்கும். பனிக் காலத்தில் கோயில் மூடப்பட்டு மூலவர் விக்ரகம் மலையடிவாரத்துக்கு கொண்டு செல்லப்படும். சார்தாம் யாத்திரையில் இடம்பெற்றுள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் கோயில்களின் வரிசையில் கேதார்நாத் 3-வது தலமாக இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நான்கு கோயில்களுக்கும் சார்தாம் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். வைணவர்களின் புனித தலமான பத்ரிநாத் கோயில் வரும் 6-ம் தேதி திறக்கப்படுகிறது. அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு வழிபாடு நடத்தவுள்ளார்.

இதையொட்டி பத்ரிநாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அடுத்தடுத்த வருகையின் காரணமாக வெள்ளத் தால் சார்தாம் யாத்திரை மீது எழுந்த அச்சம் பக்தர்கள் மத்தியில் நீங்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. மேலும் உத்தராகண்டின் சுற்றுலாவும் மேம்படும் என்றும் உள்ளூர் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE