ஆந்திரம் மாநிலத்தில் தெலங்கானாவுக்கு எதிராக வெடித்துள்ள போராட்டத்தால், சீமாந்திராவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், 10 அமைச்சர்கள் கொண்ட குழு தனது ஆய்வறிக்கையை 6 வாரத்தில் அளிக்கவுள்ளது.
தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்ட 48 மணி நேர பந்த் காரணமாக ஆந்திரத்தின் சீமாந்திரா பகுதியில் வன்முறை வெடித்தது.
போலீஸ் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். வன்முறை வேகமாகப் பரவி வருவதால் சீமாந்திரா பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தும் பல்வேறு அமைப்புகள் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் 72 மணி நேர முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலோர ஆந்திரம், ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதிகளில் வெள்ளிக்கிழமை இயல்பு வாழ்க்கை முடங்கியது.
சீமாந்திராவின் 13 மாவட்டங்களிலும் வாகனப் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது. வழிபாட்டுத் தலமான திருப்பதியில் பஸ் சேவை ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் எலமஞ்சிலி பகுதியில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் 4 கி.மீட்டர் தொலைவுக்கு இருபுறமும் வாகனங்கள் வரிசையில் காத்து நிற்கின்றன.
அனந்தபூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
கடப்பா, சித்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், காங்கிரஸ் அலுவலகங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் வீடு முற்றுகை
விசாகப்பட்டினம் அருகே விசிநகரத்தில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் போத்சா சத்தியநாராயணாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டனர். அப்போது சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்தினர்.
இதை தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர். இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
இதனிடையே, சத்திய நாராயணாவுக்கு சொந்தமான கல்லூரியையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, சிலர் கற்களை வீசி தாக்கியதில் வகுப்பறை ஜன்னல்கள், கண்ணாடிகள் சேதமடைந்தன.
முதல்வர் அவசர ஆலோசனை
சீமாந்திரா பகுதி முழுவதும் வன்முறை வேகமாகப் பரவி வருகிறது. மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து முதல்வர் கிரண் குமார் ரெட்டி வெள்ளிக்கிழமை பிற்பகலில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக வேண்டாம் என்று கூட்டத்தில் ஒருமனதாகத் ஒப்புக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
எனினும், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாநில சட்டமன்றத்தில் தெலங்கானா தனி மாநில மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதற்கு எதிராக வாக்களித்து தோற்கடிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அமைச்சர்கள் போர்க்கொடி
தெலங்கானா தனி மாநில முடிவை எதிர்த்து மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் சிரஞ்சீவி, ஜவுளித் துறை அமைச்சர் கே.எஸ்.ராவ் ஆகியோர் வியாழக்கிழமை இரவே ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு, மத்திய ரயில்வே இணையமைச்சர் கோட்லா எஸ். ரெட்டி ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்கள் ராஜிநாமா கடிதங்களை பிரதமரிடம் அளித்தனர். இதுவரை 4 மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.
மத்திய வணிக வரித் துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி, தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் கில்லி கிருபாராணி ஆகியோரும் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா
குண்டூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.எஸ். ராவ், தனது ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு வெள்ளிக்கிழமை பேக்ஸ் மூலம் அனுப்பினார்.
ராயலசீமாவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி. ராயபதி சாம்பசிவ ராவ், தனது ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவருக்கு ஏற்கெனவே அனுப்பிவிட்டார். அவரது ராஜிநாமா இன்னும் ஏற்கப்படவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு வெள்ளிக்கிழமை அவர் கடிதம் அனுப்பினார்.
மாநில சட்ட அமைச்சர் ராஜிநாமா
இதனிடையே, ஆந்திர சட்டத் துறை அமைச்சர் இரசு பிரதாப் ரெட்டி தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார். ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனிடம் அவர் நேரடியாக தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமாந்திரா பகுதியில் இருந்து காங்கிரஸ் துடைத்தெறியப்படும் என்றார்.
இதே பிரச்சினை தொடர்பாக ஆந்திர கால்நடைத் துறை அமைச்சர் விஸ்வரூப் கடந்த வாரமே தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல் 12-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்கள் ராஜிநாமா கடிதங்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம் அளித்தனர். அவர்களின் ராஜிநாமாவை முதல்வர் ஏற்கவில்லை.
சந்திர பாபு நாயுடு உண்ணாவிரதம் முடிவு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு, ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி, டெல்லியில் 7-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
ஜெகன் மோகன் உண்ணாவிரதம்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பை முறியடிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு அண்மையில் வாபஸ் பெற்றது. அதேபோல், தெலங்கானா தனி மாநில முடிவையும் மத்திய அரசு ஏன் வாபஸ் பெறக்கூடாது? ஓட்டுவங்கிக்காக காங்கிரஸ் இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது. ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் அறிவித்தார்.
10 அமைச்சர்கள் குழு நியமனம்
இதனிடையே, தெலங்கானா மாநில எல்லைகளை வரையறுப்பது, நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆராய 10 மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தக் குழு 6 வாரத்தில் தனது பரிந்துரையை மத்திய அரசிடம் அளிக்க உள்ளது.
மேலும், தெலங்கானா தனி மாநில மசோதா வரும் குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தெரிவித்தார். அடுத்த 60 நாள்களில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago