லாலுவுக்கு தோட்டக்காரர் வேலை: ராஞ்சி சிறையில் புதிய பணி
இனி அவர், பூவாளியில் நாள்தோறும் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும். லாலுவிற்கு இதுவரை பணிகள் எதுவும் ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனால், பூஜை புனஸ்காரங்களில் மூழ்கியிருந்தார் லாலு.
இவரைச் சந்திக்க வரும் கட்சிக்காரர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் அதிகமாக இருந்தனர். தற்போது, இவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்ட நிலையில் லாலுவுக்கு செடிகளுக்கு நீர் ஊற்றும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பீர்சா முண்டா சிறையின் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: 'லாலு, சட்டம் படித்தவர் என்பதால் மற்ற கைதிகளுக்கு பாடம் சொல்லித் தரும் பணியை அவருக்குத் தரலாம் என தொடக்கத்தில் நினைத்தோம். ஆனால், கைதிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பால், லாலுவுக்கு பாதுகாப்பு பிரச்சனை வரலாம். மேலும், லாலு அவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறார் எனப் புகார்கள் வரவும் வாய்ப்புண்டு. எனவே, செடிகளுக்கு நீர் ஊற்றும் பணியை அவருக்குத் தந்துள்ளோம்' என்று அந்த வட்டாரம் கூறின.
லாலுவுடன் சிறைத் தண்டனை பெற்றுள்ள மக்களவை உறுப்பினரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெகதீஷ் சர்மாவிற்கும் நீர் ஊற்றும் பணி கிடைத்துள்ளது. இருவருமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சில நாட்களாக திருப்தியுடன் செய்வதாகக் கூறப்படுகிறது.
இவர்களுடன் தண்டனை பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான பூல்சந்த் சிங், மஹேஷ் பிரசாத், பெக் ஜீலியஸ் மற்றும் தமிழரான கே.ஆறுமுகம் ஆகியோருக்கு கைதிகளுக்கு பாடம் சொல்லித் தரும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.