15-வது மக்களவை நிறைவடைந்தது: மன்மோகன் உருக்கம்; அத்வானி கண்ணீர்

By செய்திப்பிரிவு

15-வது மக்களவை வெள்ளிக் கிழமை நிறைவடைந்தது. இறுதி நாளில் பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமான உரை நிகழ்த்தினார். பாஜக மூத்த தலைவர் அத்வானி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவையில் கண்ணீர் சிந்தினார்.

மக்களவையில் முதலில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெலங்கானா மசோதா நிறைவேற ஆதரவளித்த பாஜகவுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தெலங்கானா மசோதா நிறைவேறி யிருப்பதன் மூலம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படும் ஆற்றல் அவைக்கு உள்ளது நிரூபணமாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேசிய

போது, தெலங்கானா மசோதா நிறைவேற உதவிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை புகழ்ந்து தள்ளினார். பதிலுக்கு சுஷ்மாவும் காங்கிரஸ் தலைவர் களுக்கு புகழாரம் சூட்டினார்.

சோனியா பிரதமரானால் தலையை மொட்டையடித்துக் கொள்வேன் என்று ஒரு காலத்தில் கூறிய சுஷ்மா, நேற்றைய மக்களவையில் சோனியா பெருந்தன்மையான தலைவர் என்று மனதாரப் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய சுஷ்மா, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஒரு நியாயவாதி என்று கூறியபோது அத்வானியால் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை அவர் அவசரமாக துடைத்தார்.

வழக்கமாக கூச்சல், குழப்பம், அமளியில் தத்தளிக்கும் மக்களவை நேற்று அமைதிப் பூங்காவாக இருந்தது.

அவை உறுப்பினர்கள் பசுமை நிறைந்த நினைவுகளோடு வாழ்த்துக் கூறி விடைபெற்றனர்.

சுஷ்மாவை புகழ்ந்த சுஷில்குமார்

தெலங்கானா மசோதா நிறைவேறுவதற்கு ஆதரவு அளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே புகழாரம் சூட்டினார்.

மக்களவையில் வெள்ளிக் கிழமை பேசிய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, பாஜகவுக்கும் அதன் தலைவர் களுக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவையில் காரசாரமாக மோதிக் கொண்டாலும் அவைக்கு வெளியே நட்பு பாராட்டுகின்றனர். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பம்சம்.

இந்த 15-வது மக்களவையில் லோக்பால் சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

பாஜக உறுப்பினர்களின் ஆதரவுடன் தெலங்கானா மசோதா மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மசோதாவை பாஜக ஆதரிக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே இருந்தது. ஆனால் கவுரவத்தைப் பாராமல் தெலங்கானா புதிய மாநிலம் உருவாக பாஜக ஆதரவு அளித்தது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

சுஷ்மாவின் குரல் அவையில் தித்திப்பாக ஒலித்தது. அந்தக் குரல் இனிப்பு வகைகளைவிட மிகவும் தித்திப்பாக இருந்தது என்றார் சுஷில் குமார் ஷிண்டே.

அமளி அதிகம்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் கூச்சல், குழப்பம், அமளியால் அதிகம் பாதிக்கப்பட்ட அவையாக 15-வது மக்களவை இடம்பெற்றுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி 2010 குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. இதனால் அந்தக் கூட்டத் தொடர் முழுமையாக முடங்கியது. 2012-ம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின்போது நிலக்கரி சுரங்க ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் அவையின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

பல்வேறு ஊழல் விவகாரங்களால் கடந்த 5 ஆண்டுகளும் மக்களவையின் பல்வேறு கூட்டத் தொடர்கள் அமளியால் முடங்கின.

இறுதியாக தற்போது நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தெலங்கானா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மக்களவையில் சக உறுப்பினர்கள் மீது மிளகுப் பொடியை தூவியது, அவை ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, முக்கிய ஆவணங்களைக் கிழித்தெறிந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின. தெலங்கானா எதிர்ப்பாளர்களின் அமளியால் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே 20 நிமிடங்கள் மட்டுமே ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை வாசித்தார். ஒட்டுமொத்தமாக இந்திய வரலாற்றில் கூச்சல், குழப்பம், அமளியால் அதிகம் பாதிக்கப்பட்ட அவையாக 15-வது மக்களவை இடம்பெற்றுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்