தகிக்கும் போராட்டம்: தவிக்கும் ஆந்திரம்

ஒன்றுபட்ட ஆந்திரத்தை வலியுறுத்தி, சீமாந்திரா பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

தெலங்கானா தனி மாநிலத்திற்கு கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 3ல்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததில் இருந்து, நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் போராட்டத் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது சீமாந்திரா மின்வாரிய ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தம்.

மின்வாரிய ஊழியர்கள் 8000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் 2வது நாளாக மின் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. சுமார் 50 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.

உண்ணாவிரதப் போராட்டம்:

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத்தில் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4-வது நாளை எட்டியுள்ளது. தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அமைச்சரவை ஆலோசனை:

தெலங்கானாவுக்கு எதிரான போராட்டங்கள் கட்டுக்கு அடங்காமல் உருவாகி சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் சீமாந்திரா மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், மின் தடை பிரச்சினையை சரி செய்வது குறித்தும் மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்தயிருப்பதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE