மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்: குடியரசு தின உரையில் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்
65-வது குடியரசுத் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரை வருமாறு:
கடந்த சில ஆண்டுகளாக மத்தியில் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் இந்திய அரசியலில் குழப்பம் ஏற்படுகிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டால் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையற்ற அரசே மத்தியில் அமையும். அதனால் சந்தர்ப்பவாதிகள் கையில் அரசு சிக்கிவிடும். அது நாட்டுக்கு பேராபத்தாகிவிடும். அதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. இப்போது ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறும் வகையில் நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்தியாவின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
இந்தியா அழகான நாடாக வலிமைமிக்க நாடாக உருவெடுத்துள்ளது. ஆனால் சில நேரங்களில் நமது ஜனநாயகத்தில் கூச்சல், குழப்பம் நிலவுகிறது. எனினும் தன்னுடைய தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் வலிமை ஜனநாயகத்துக்கு உள்ளது. 2014-ம் ஆண்டு இந்திய வரலாற்றில் முக்கிய ஆண்டாக அமைய வேண்டும்.
நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்கு இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் இந்திய கிராமங்கள், நகரங்களை 21-ம் நூற்றாண்டின் தரத்துக்கு அவர்கள் உயர்த்திக் காட்டுவார்கள். இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பாருங்கள். அவர்கள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி எழுதுவார்கள். அந்த நிலையை இந்தியா அடைய மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். மத்தியில் பெரும்பான்மை இல்லாத அரசு அமைந்தால் சந்தப்பவாதிகளின் கைகளில் அரசு பிணைக் கைதியாகிவிடும். அதனால் நாடு பேரழிவைச் சந்திக்கும் ஆபத்து உள்ளது.
மக்களிடையே பேராதரவைப் பெற்றிருந்தாலும் அராஜகவாதிகளாக இருந்தால், அவர்கள் ஆட்சி நிர்வாகத்துக்கு ஏற்றவர்கள் அல்ல. தங்கள் மனம்போன போக்கில் வாக்குறுதிகளை அளிக்க தேர்தல் யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. எது சாத்தியமோ, அதைப் பற்றி மட்டுமே வாக்காளர்களுக்கு உறுதி தர வேண்டும்.
மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அந்தப் பொறுப்பு ஒவ்வொரு வாக்காளருக்கும் உள்ளது. இந்தியா பின்தங்க நாம் அனுமதிக்கவே கூடாது. அதற்கு இப்போதே ஆய்வு செய்து செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்” என்றார் பிரணாப் முகர்ஜி.