அமைச்சரவைக் கூட்டத்தில் ராகுல் கருத்துக்கு முக்கியத்துவம்: பிரதமர்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு ஆதரவான அவசரச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துகளுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியத்துவம் தரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள விளக்கம் ஒன்றில், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மத்திய அமைச்சரவை அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதுதொடர்பாக மக்களிடையே பெரும் விவாதம் கிளம்பியுள்ளது.

இந்த விவகாரத்தையொட்டி, எனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அத்துடன், அவர் தனது கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

அவசரச் சட்டம் தொடர்பாக எழுப்பப்பட்டு வரும் அனைத்து விஷயங்கள் குறித்தும், நான் இந்தியா திரும்பிய பிறகு நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்” என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவிலிருந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்க அவசரச் சட்டம் கொண்டு வரும் விஷயத்தில் மத்திய அரசு முட்டாள்தனமாகச் செயல்படுகிறது. அந்த அவசரச் சட்டத்தைக் கிழித்து எறிய வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE