மஹாராஷ்டிரா, ஹரியாணா மாநில தேர்தல்களில் பாஜக-வுக்கு பெரும்பான்மை கிட்டாது: கருத்துக் கணிப்பில் தகவல்

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அதிக இடங்களில் வென்ற தனிப்பட்ட கட்சியாக வரலாமே தவிர அருதிப்பெரும்பான்மை கிடைக்காது என்று இந்தியா டிவி-சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹரியாணாவில் 90 இடங்கள் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக 34 இடங்களையும், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தள் கட்சி 27 இடங்களையும், கடந்த 10 ஆண்டுகளாக அங்கு ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் 16 இடங்களையும் கைப்பற்றிடலாம் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக 132 முதல் 142 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், சிவசேனா கட்சி 50 முதல் 60 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சி 31-41 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 38-48 இடங்களைக் கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 2009-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 144 இடங்களிலும், பாஜக-சிவசேனா கூட்டணி 90 இடங்களிலும் மற்ற கட்சிகள் 54 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை பாஜக-சிவசேனா கூட்டணி அமையாவிட்டாலும் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணி அமைத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE