சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும்

By செய்திப்பிரிவு

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இனிமேல் உச்ச நீதிமன்றமே விசாரணை நடத்தும் என்று நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், செலம்மேஸ்வர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக 12 நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான பரிந்துரை பட்டியல் கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்றச் செயலருக்கு அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். எனவே அந்தப் பட்டியலை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி. தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ஜனவரி 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சி.எஸ். கர்ணன் நேராக நீதிமன்ற அறைக்குள் வந்து, நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைப் பட்டியல் நியாயமற்றதாக உள்ளது, இதுதொடர்பாக எனது பெயரில் மனு தாக்கல் செய்ய உள்ளேன், இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதியில் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை பரிந்துரை பட்டியல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்ற தனி அமர்வின் உத்தரவால் நீதிபதிகள் தேர்வுக் குழுவின் பணியில் பாதிப்பு ஏற்படும், இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், செலம்மேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தார்.

நீதிபதிகள் நியமனத்தில் அடிப்படை தகுதி வரம்புகள் மீறப்பட்டிருந்தால் மட்டுமே கேள்வி எழுப்ப வேண்டும், தேவையில்லாமல் சர்ச்சைகளை எழுப்பக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சவுகான், செலம்மேஸ்வர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஜனவரி 9-ம் தேதி உத்தரவுக்குத் தடை விதித்தனர்.

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இனிமேல் உச்ச நீதிமன்றமே விசாரணை நடத்தும் என்று தெரிவித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் செயலை கடுமையாகக் கண்டித்தனர்.

நீதிபதி கர்ணன் கருத்து தெரிவிக்க விரும்பினால் அவர் வழக்கில் தன்னை ஒரு பிரதிவாதியாக இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவர் பிரதிவாதியாக இல்லாத நிலையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க உரிமையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்