வாஜ்பாய், அத்வானியைவிட மோடி வலுவான வேட்பாளர் அல்ல: ப.சிதம்பரம்
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "வாஜ்பாய் மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டபோது, பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்தக் கட்சி தோல்வியடைந்தது. அப்போது, நாங்கள் (காங்கிரஸ்) பிரதமர் வேட்பாளர் பெயரைக் கூட அறிவிக்கவில்லை. வாஜ்பாயைவிட மோடி பெரிதானவர் என்று நான் நினைக்கவில்லை,
அதேபோல், 2009 பொதுத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட எல்.கே.அத்வானியைக் காட்டிலும் மோடி வலுவான வேட்பாளர் இல்லை. மோடி எல்லா மாநிலங்களிலும் வெற்றியைத் தேடித் தருவார் என்பதெல்லாம் அளவுக்கு மிஞ்சிய கற்பனை" என்றார் ப.சிதம்பரம்.
நகர்ப் பகுதி இளைஞர்கள் மத்தியில் மோடி பிரபலமாக இருப்பதற்குக் காரணம், ஊடகங்கள் உருவாக்கிய மாயைதான் என்று அவர் கூறினார்.
ஊழல் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், சண்டிகர், மத்திய பிரதேசம், கர்நாடகம் மற்றும் குஜாரத் ஆகிய மாநிலங்களில் ஊழல் பிரச்சினையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்வர் மோடி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு கூட்டத்தைக் காங்கிரஸ் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.