சாதி, மதத்தால் மக்களைப் பிரிக்கும் சக்திகள்: பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி எச்சரிக்கை
டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் மன்மோகன் சிங் பேசியதாவது:
நாட்டின் சில பகுதிகளில் மதம், ஜாதி, சமூகங்களின் அடிப்படையில் கலவரங்களை ஏற்படுத்தி பிரிவினையை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி மேற்கொள்கின்றன. இந்தச் சூழ்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்க வேண்டியது இப்போது அவசியமாகியுள்ளது.
இந்திரா காந்தியின் தலைமை, வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனின் முயற்சியால்தான் நாட்டில் பசுமை புரட்சி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இப்போது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றார்.
விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியது: தேச நலனுக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். சில அமைப்புகள், சக்திகள் ஜாதி, மதம், சமூகத்தின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்கின்றன. அந்த சக்திகளுக்கு எதிராக இந்திரா காந்தியின் துணிவு, கொள்கைகளின் அடிப்படையில் போரிடுவோம் என்று அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பெயர்களை குறிப்பிடாமல் சோனியா காந்தி இந்த குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.