ஊழலை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஊழலை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

டெலியில் இன்று நடைபெற்ற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியது:

"ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எந்த ஒரு தொய்வும் இல்லை. ஆனால், அந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சொற்பமானதாகவே இருக்கிறது.

ஊழல் பெருகுவதால் பொதுத் துறை சேவைகளின் செயல் திறன் குறைந்துள்ளது, முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது காலம் தாழ்த்தப்படுகிறது, பரிவர்த்தனை செலவுகள் அதிகமாகின்றன.

ஒட்டுமொத்தத்தில் சமுதாயத்தின் நன்நெறி சீர்கெட்டுப்போய் இருக்கிறது. ஏழைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெகுஜன மக்கள் மத்தியில் அரசு அங்கங்கள் மீது நம்பிக்கை இன்மை எழுந்துள்ளது. இத்தருணத்தில், ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது சிறப்பான பணியின் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஊழலை ஒழிப்பது மட்டுமல்லாமல், அரசு அங்கங்கள் சரியாக இயங்குகிறதா என்பதையும் கண்காணிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார் பிரணாப் முகர்ஜி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE