தயக்கங்களையும் பாசாங்குகளையும் கைவிட்ட மோடி

By சேகர் குப்தா

இந்தியாவும் அமெரிக்காவும் இத்தனை ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த வரலாற்றுத் தயக்கத்தைக் கைவிட்டுவிட்டன” என்று வெள்ளை மாளிகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி புதுடெல்லி ஐ.ஐ.டி.யில் சில நாள்களுக்கு முன் நினைவுகூர்ந்தார். வரலாறு தொடர்புடைய தயக்கத்தை மட்டுமல்ல பாசாங்குத்தனத்தையும் இரு நாடுகளும் கைவிட்டுவிட்டன. கெர்ரி மட்டும் அந்த அரங்கிலிருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்திருந்தால் ‘ஜமால் அப்துல் நாசர்’ என பெயரிடப்பட்ட டெல்லி வெளிவட்டச் சாலையைக் கண்டிருப்பார். ‘பனிப்போர்’/ ‘அணி சாரா’ நாடுகள் காலத்தில் எகிப்தை ஆண்ட சர்வாதிகாரியான நாசரின் பெயரை சாலைக்குச் சூட்டியிருக்கும் ஒரே வெளிநாடு இந்தியாதான். அவருடைய ஆட்சி மரபை அந் நாட்டு மக்களே இப்போது தூக்கி எறிந்துவிட்டது வேறு விஷயம். அந்த இடத்திலிருந்து கிழக்காக ஒரு மைல் நடந்திருந்தால் அதே நிழற்சாலை ‘ஹோ சி மின்’ சாலை என்று பெயரிடப்பட்டிருப்பதைக் காணலாம். பனிப்போர் காலமும் அதன் நினைவுகளும் டெல்லி மாநகர வீதிகளின் பெயர்களாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஏதோ ஒரு காரணத்துக்காக ஜான் கெர்ரி தன்னுடைய டெல்லி பயணத்தை மேலும் 2 நாள்களுக்கு நீட்டித்தார். அடுத்த நாள்தான் அதற்கான காரணம் புரிந்தது. எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா எல் அசிசி புது டெல்லிக்கு வந்தார். அவரை டெல்லியில் சந்தித்துப் பேசுவதற்குத்தான் கெர்ரி காத்திருந்தார்.

அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ அணிக்கும் சோவியத் யூனியன் தலைமையிலான ‘வார்சா ஒப்பந்த நாடுகள்’ அணிக்கும் இடையிலான ‘பனிப் போர்’ ஓய்ந்து 25 ஆண்டுகளாகிவிட்டன. அமெரிக்கா மட்டுமே வல்லரசு என்ற ‘ஒரு துருவ உலகு’ ஏற்பட்டுள்ளது. அதற்குப் போட்டியாக ஒன்று (சீனா) தோன்றியிருக்கிறது.

கியூபா, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகள் பழைய விரோதத்தை மறந்துவிட்டன. ஜான் கெர்ரி, அசிசி, மோடி ஆகிய மூவரையும் நாசர் சாலைப் பெயர்ப் பலகை அருகே நிற்க வைத்து புகைப்படம் எடுத்திருந்திருக்கலாம். அது வரலாற்றுக்கால தயக்கங்களும் பாசாங்குகளும் விடைபெற்றதற்கு சாட்சியாக இருந்திருக்கும்.

பெர்லின் சுவர் தகர்ப்புக்குப் பின்

மேற்கு ஜெர்மனியையும் கிழக்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட வரலாற்றுச் சம்பவத்துக்குப் பிறகு, வெளிவிவகாரத்தில் பழைய தயக்கங்களைக் கைவிட வேண்டும் என்பதை இந்தியாவின் மூன்று முக்கியப் பிரதம மந்திரிகள் உணர்ந்திருந்தனர். அவர்கள் பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங். ஆனால் ஒவ்வொருவருமே தயக்கங்களாலும் போலிப் பாசாங்குகளாலும் செயல்பட முடியாமல் தடுக்கப்பட்டனர். அமெரிக்காவுடன் கூட்டை விரும்பினார் ராவ். ராணுவ யுக்தி தொடர்பாக இரு நாடுகளும் கூட்டாளிகளாகச் செயல்படுவதற்கு வழிசெய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் வாஜ்பாய். ஆனால் அவருடைய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவை ‘அமெரிக்கச் சார்பாளர்’ என்று ஆர்.எஸ்.எஸ். சந்தேகித்ததால் மேற்கொண்டு செயல்பட முடியாமல் தடுக்கப்பட்டார். அமெரிக்கா வும் இந்தியாவும் இயல்பான கூட்டாளிகள் என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அமெரிக்காவுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பினார். பனிப்போர் காலத்திய நிலையிலிருந்து மாறக்கூடாது என்று விரும்பும் காங்கிரஸ்காரர்கள் அதைத் தடுத்துவிட்டனர்.

நரேந்திர மோடியோ தயக்கங்களையும் பாசாங்குகளையும் தூக்கி வீசிவிட்டார், அமெரிக்காவுடனான ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியபோது, ‘தவிர்க்க முடியாதது’ (Indispensable) என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இரு நாடுகளின் எதிர்கால உறவை இந்தியாவின் பாதுகாப்பு, ராணுவம், தற்காப்பு போன்ற தேவைகளே தீர்மானிக்கும் என்றார். அமெரிக்காவுக்கு இந்தியா தவிர்க்க முடியாத ராணுவக் கூட்டாளி என்றார்.

அமெரிக்காவுடன் இந்தியா ராணுவ ரீதியாக நெருக்கமான கூட்டு வைப்பது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் மோடியின் பேச்சில் முக்கியப் பகுதி அது. ‘அணி சாரா’ நாடுகளின் (நாம்) இயக்க மாநாட்டில் பிரதமர் சரண் சிங்கால் 1979-ல் பங்கேற்க முடியாமல் போனது. ‘நித்ய கண்டம் பூரணாயுசு’ என்ற நிலையில் செயல்பட்ட அந்த அரசின் பிரதமர், மாநாட்டுக்கு வராதது பெரிய குறையாக பேசப்படவில்லை.

சொந்தக் கட்சி மூலமே பெரும்பான்மை வலுவைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அணி சாரா நாடுகள் அமைப்பின் மாநாட்டுக்குப் போகவில்லை என்றால் அது உணர்த்தும் செய்தியே தனி.

ஜனநாயகத்தில் ஆட்சியதிகாரம் ஒரு கட்சியிடமிருந்து இன்னொரு கட்சிக்கு மாறலாம்; வெளியுறவுக் கொள்கையிலும் ராணுவ உத்தியிலும் மாற்றங்கள் கூடாது என்பதே பரவலான தேசிய கருத்தொற்றுமை முடிவாக இருந்து வந்திருக்கிறது. ஆட்சியின் மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் மோடி இந்த நிலையைக் கைவிட முன் வந்திருக்கிறார்.

சீனத்துடனும் இஸ்லாமிய உலகத்துடனும் சுமுக உறவு வைத்துக் கொள்ளவே மோடி விரும்புகிறார். “உங்களுக்கு எங்களுடைய சந்தை வேண்டும். எங்களுக்கு உங்கள் பொருள் வேண்டும். வெளிவர்த்தகப் பற்று வரவில் கிடைக்கும் உபரியை அனுபவித்துக் கொள்ளுங்கள். இந்திய நலனுக்கு எதிராகச் செயல்படாதீர்கள். செயல்பட்டால் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்பதை வெளிப்படையாகவே உணர்த்திவிட்டார்.

இஸ்லாமிய நாடுகளோடும் உறவை வலுப் படுத்த சன்னி, ஷியா முஸ்லிம்களுடன் தனக்கிருக் கும் தனிப்பட்ட மற்றும் தேசியத் தொடர்புகள் மூலம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் கூறினால், பலுசிஸ்தானிலும் கில்ஜித்-பல்டிஸ்தானிலும் உள்ள நிலைமை பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறோம். கடந்த 25 ஆண்டுகளாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எச்சரிக்கையுடன் கடைப்பிடித்து வந்த கொள்கையைத் துணிச்சலுடன் தூக்கி எறிந்திருக்கிறார். அந்தக் கொள்கைக்குப் பலன் இருந்தது என்று சிலர் வாதிடலாம். இதுவரை அடைந்த பலனே போதும் என்று மோடி கருதுகிறார்.

“எங்களை மிரட்ட முடியாது; நாங்கள் அணு ஆயுத நாடு” என்று பாகிஸ்தான் அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறது. இந்த அம்சத்திலும் அவரால் பாகிஸ்தானுக்குச் சரியான பதிலடி கொடுக்க முடியும். “அணு ஆயுதம் எங்களிடமும் இருக்கிறது, விஷமம் செய்தால் பலனை அனுபவிக்க நேரும்” என்று நேரடியாகவே எச்சரித்துவிடலாம்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்