மகா கூட்டணிக்கு மகத்தான வெற்றி; பிஹாரில் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் நிதிஷ் குமார்

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் மாநில சட்டப்பேரவையின் 243 தொகுதிகளில் 170-க்கும் மேலான இடங்களை வசப்படுத்தும் நிதிஷ் - லாலு - காங்கிரஸ் மெகா கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.

பிரதமர் மோடியின் பிரச்சார யுக்தியும், அமித் ஷாவின் தேர்தல் வியூகங்களும் பிஹாரில் கைகொடுக்கவில்லை என்பது தெளிவானது.

| இணைப்பு ->பிஹார் தேர்தல் முடிவுகள் - செய்தித் தொகுப்பு |

நாடு முழுவதிலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி வெளியாகின. வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றுகட்ட மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்தத் தேர்தலில் மெகா கூட்டணிக்கு 178 தொகுதிகள் வசமாகின. இதன் உறுப்பினர்களான ஐக்கிய ஜனதா தளம் 71, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 மற்றும் காங்கிரஸ் 27 தொகுதிகளையும் தன்வசப்படுத்தி உள்ளன.

இவர்களுடன் நேரடி மோதலில் ஈடுபட்டிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 64 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டும் நிலை. பாரதிய ஜனதா கட்சிக்கு 53, லோக் ஜன சக்திக்கு 3, ராஷ்ட்ரிய சமதா கட்சிக்கு 2 மற்றும் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவிற்கு ஒரு தொகுதி மட்டும் கிடைக்கும் சூழல்.

இடதுசாரி கூட்டணியின் உறுப்பினரான சிபிஐ எம்.எல் கட்சிக்கு மட்டும் 2 மற்றும் சுயேச்சைகளில் 4 பேர் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.

முதல்வராகிறார் நிதிஷ்

இந்த முடிவுகளை அடுத்து, மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

மெகா கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களில் லாலு மற்றும் நிதிஷ்குமாரின் கட்சிகள் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட்டனர். ஆனால், லாலுவின் கட்சியை விடக் குறைவான தொகுதிகள் நிதிஷுக்கு கிடைத்துள்ளன. இதனால், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நிதிஷ் அப்பதவியில் அமர்வதில் எந்த சிக்கலும் இருக்காது எனக் கருதப்படுகிறது. ஏனெனில், கடைசிகட்ட தேர்தலுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, இதை எதிர்பார்க்கும் வகையில், தம் கட்சியை விடக் குறைவான வாக்குகள் பெற்றாலும் நிதிஷ்குமாரே முதல்வர் பொறுப்பு ஏற்பார் என உறுதியாகக் கூறி இருந்தார்.

இதனிடையே, சகிப்பின்மை விவகாரத்தில் பாஜகவுக்கு கிடைத்துள்ள தோல்வி இது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. | வாசிக்க ->பணபலம், 'சகிப்பின்மை'க்கு கிடைத்த தோல்வி: பிஹாரில் பாஜக வீழ்ச்சி மீது குவியும் விமர்சனங்கள் |

கடந்த அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை என ஐந்து கட்டங்களாக நடைபெற்றது பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல். இதில் லாலு பிரசாத் யாதவ், நித்ஷ் குமார் மற்றும் காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணிக்கும், பாஜக தலைமையின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி மோதல் நிலவியது.

பாஜக அணியில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்தி, உபேந்திரா குஷ்வஹாவின் ராஷ்ட்ரிய சமதா, ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகியோர் இணைந்திருந்தனர். இவர்களுடன், உபியின் சமாஜ்வாதி தலைவரான முலாயம் சிங் தலைமையிலான ஒன்றும், ஆறு இடதுசாரிகள் கட்சிகள் இணைந்து மற்றொன்றும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையில் புதிதாக ஒன்றும் என மூன்று கூட்டணிகள் உருவாகி போட்டியிட்டன.

இவர்களுடன் உ.பி.யின் முன்னாள் முதல் அமைச்சர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அனைத்திலும், ஐதராபாத்தின் முஸ்லீம் தலைவரான அசாத்தீன் உவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ் ஏ இத்தஹாதூல் முஸ்லீமின் கட்சி ஆறு தொகுதிகளிலும் போட்டியிட்டு இருந்தன. இவர்கள் இருவருக்கும் ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை.

தேஜமு மற்றும் மெகா கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவியது. இதில் அதிகமானப் பிரச்சாரக் கூட்டங்களில் தீவிரமாக கலந்து கொண்டு பிரதமர் நரேந்தர மோடி தம் கூட்டணிக்கு வாக்குகள் சேகரித்திருந்தார். இதுபோல், ஒரு மாநில சட்டப்பேரவை தேர்தலில் நாட்டின் பிரதமரே தன் கட்சிக்காக முன்னிறுந்து பிரச்சாரம் செய்வது முதல் முறை எனக் கருதப்பட்டது.

இவருக்கு பதில் அளிக்கும் வகையில் நிதிஷ் குமார் மற்றும் லாலு இணைந்து பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இதன் காரணமாக பிஹார் தேர்தலின் முடிவுகளில் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவே ஆட்சி அமைத்துள்ளன. அந்த வகையில், மக்களவை தேர்தலுக்கு பின் பாஜகவுக்கு பிஹார் மாநிலத்தில் கிடைத்தது முதல் தோல்வி ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்