பாட்னா குண்டுவெடிப்பு: தீவிரவாதி உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு
பாட்னாவில் கடந்த 27-ம் தேதி வெடிகுண்டு வைக்க முயன்ற போது தவறுதலாக வெடித்து அய்னூல் அன்சாரி காய மடைந்தார். அவரை கைது செய்ய போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரது மூளையில் இரும்புத் துகள்கள் துளைத்திருந்ததால் 5 நாள்களாக உயிருக்குப் போராடிய அவர் வியாழக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தார்.
அவரது உடலைப் பெற குடும்பத்தினர் யாரும் வராததால் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் 3 நாள்களாக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ராஞ்சியில் உள்ள அய்னூல் அன்சாரியின் தந்தை அதுல்லா அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியபோது, தீவிரவாதச் செயலில் ஈடுபட்ட அவன் எனக்கு மகனே இல்லை, அவனது உடலை நான் பெற்றுக் கொள்ளவே மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அவரது குடும்பத்தின் இதர உறுப்பினர்களும் உடலைக் கேட்டு வரவில்லை. எனவே, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இஸ்லாமிய மதச்சடங்குகளின்படி அய்னூல் அன்சாரியின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக பாட்னா எஸ்.பி. தெரிவித்தார்.