கட்டப் பஞ்சாயத்து இந்திய கலாச்சாரமா? கேஜ்ரிவாலுக்கு ப.சிதம்பரம் கேள்வி

By செய்திப்பிரிவு

கட்டப் பஞ்சாயத்து என்பது பிற்போக்கானவை, அது தேச கலாச்சாரத்தின் ஒரு பகுதி ஆகாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கட்டப் பஞ்சாயத்தை தடை செய்ய வேண்டியதில்லை. அது நமது கலாச்சாரம் சார்ந்தது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக மேலும் கூறியுள்ளது.

கட்டப் பஞ்சாயத்து என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டுதான் சிலர் பேசுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல. கட்டப் பஞ்சாயத்தை நமது கலாச்சாரம் சார்ந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அது செயல்படும் விதம் இந்தியாவின் கலாச்சாரம் சார்ந்ததாகவா இருக்கிறது. நிச்சயமாக இல்லை. இது போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை முட்டாள்தனமாக பேசுகிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

ஆண்களும், பெண்களும் என்ன உடை அணிய வேண்டும். யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். யாரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கட்டப் பஞ்சாயத்து கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா.

கட்டப் பஞ்சாயத்து ஒன்று மட்டுல்ல, வேறு பல அமைப்புகளும் இந்திய சமூகத்தில் பல்வேறு விஷக் கருத்துகளைக் கூறி அவை நமது நாட்டின் கலாச்சாரம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன. இதுபோன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE