ராமர் கோயில் - பாபர் மசூதி பிரச்சினை: ஜெயேந்திரர் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வி; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக முஸ்லிம்கள் கருத்து

By ஆர்.ஷபிமுன்னா

ராமர் கோயில் - பாபர் மசூதி பிரச்சினை தொடர்பாக காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி நடத்திய சமரச பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது. இது விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக முஸ்லிம்கள் கூறிவிட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதிக்கு இடையிலான பிரச்சினை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தொடர்கிறது. இதுதொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரு தரப்பினருக்கிடையிலான இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஜெயேந்திரர் முயற்சி செய்தார். இதற்காக கடந்த சனிக்கிழமை லக்னோவுக்கு சென்ற அவர், அங்குள்ள முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குறிப்பாக, ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரர்களான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் காலீத் ரஷீத் பிராங்கி மஹெலியுடன் ஜெயேந்திரர் முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார். இது மூடிய கதவுகளுக்குள் இருவருக்கும் இடையே சுமார் ஒருமணி நேரம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் காலீத் ரஷீத் பிராங்கி கூறும்போது, “லக்னோ வந்திருந்த சங்கராச்சாரியாரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது பாபர் மசூதி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். மசூதி விஷயத்தில் முஸ்லிம்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதால், இதுபற்றி சமரசம் பேச வாய்ப்பில்லை என்பதை அவரிடம் தெளிவாகக் கூறி விட்டேன்” என்றார்.

இதுபோன்ற சமரச பேச்சு வார்த்தையில் ஜெயேந்திரர் ஈடுபடுவது முதன்முறை அல்ல. ஏற்கெனவே அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் கேட்டுக் கொண்டதன் பேரில், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் தலைவராக இருந்த மவுலானா ரப்பே ஹசன் நத்வீயுடன் மார்ச் 2002-ல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது சுமார் ஒரு வருடத்துக்கு தொடர்ந்த போதிலும் தோல்வி அடைந்தது. இப்போது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், ஜெயேந்திரரால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சி மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE