லாலு! இந்த பெயரை கேட்டாலேயே சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அரசியலில் விசித்திரமானவராக சித்தரிக்கப்பட்டவர். பீகாரில் முன்னேற்றம் இல்லாமல் போனதற்கும் காரணமாக பேசப்பட்டவர். கடந்த ஆட்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சராகி, நஷ்டத்தில் போய்க் கொண்டிருந்த துறைக்கு லாபம் தேடித் தந்ததாக கருதப்பட்டவர்.
இதன் பிறகு, லாலுவைப் பற்றி இருவேறு கருத்துகள் எழுந்தன. ஒன்று, "லாலுவைப் புரிந்துகொள்ள மக்களுக்கு கால தாமதமானது' மற்றொன்று, 'தனது மாட்டுத் தீவன ஊழலை மறைக்க லாலு, புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்" என்பது. தற்போது, அந்த ஊழல் வழக்கில் லாலுவின் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவரது அரசியல்ரீதியான வளர்ச்சி பற்றிய பார்வை இது.
பிகாரின் தலைநகரான பாட்னாவில் கடந்த 1970 ஆம் ஆண்டு ஒரு அரசியல் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. இதில், ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெர்ணான்டஸ் உட்பட காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல தலைவர்கள் கூடியிருக்க, பீகாரின் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூரும் அங்கு இருந்தார்.
அப்போது அவர் ஒரு மூலையில் கைகட்டி நின்று கொண்டிருந்த இளைஞனை பார்த்து, 'இவன் எதிர்காலத்தில் ஒரு பெரிய தலைவனாக வருவான். அந்த அளவுக்கான பேச்சுத் திறமை அவனிடம் இருக்கிறது.' என குறிப்பிட்டு அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவருடைய வாக்கு பலித்தது. அந்த இளைஞன்தான் லாலு - இன்று மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் லாலு பிரசாத் யாதவ்.
பாட்னா பல்கலைகழகத்தில் பியூனாக இருந்த லாலுவின் மாமா, கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் லாலுவின் திறமையைக் கண்டு வியந்து, அவரை பல்கலைக்கழத்தில் கொண்டு வந்து சேர்த்தார். இதன் மாணவர் பேரவை செயலாளராக 1974 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட லாலுவைக் கண்டு பலரும் வியந்தனர். காரணம், உயர்ந்த சமூகம் அல்லது பணபலம் என எதுவும் இன்றி அந்தப் பதவிக்கு எவரும் வந்தது கிடையாது.
அந்தக் கால கட்டத்தில், குஜராத்தின் அகமதாபாத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் 1966-ல் துவக்கி வைத்த விலைவாசி உயர்வு போராட்டத்தைkd கையில் எடுத்தார் லாலு. அதில், முதன் முறையாக பீகார் மாணவர்கள் மற்றும் பெண்களையும் சேர்த்தார். அன்று முதல் சூடு பிடித்த லாலுவின் அரசியல் வாழ்வில் அவரது மனைவியாக கரம் பிடித்தார் ராப்ரிதேவி.
இதற்கிடையே இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தபோது, மிசா சட்டத்தில் கைதானார் லாலு. ஆனால் மனம் தளராத லாலு, சிறையில் இருந்தபோது தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு மிசா பாரதி என பெயரிட்டார்.
அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சப்ரா தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.பி.யானார். ஆனால், அதே தொகுதியில் அவருக்கு 1980-ல் தோல்வி காத்திருந்தது. இதற்கு பின் பீகாரின் மாதேபுரா தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவரது அரசியல் வாழ்வில் ஏறுமுகம் தொடர்ந்தது.
பீகார் சட்டசபையின் புயலாகக் கருதப்பட்ட லாலுவிற்கு, இவரது குருவான கற்பூரி தாக்கூர் 1987 ஆம் ஆண்டு இறந்த பிறகு அவர் வகித்த எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தது. அன்று முதல் பீகாரின் முதல் அமைச்சர் பதவியை குறி வைத்து வலை வீசியவருக்கு, அது அடுத்த 3வது ஆண்டில் கிடைத்தது.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள லாலு செய்த சாணக்கியத்தனத்தால், கட்சி உடைந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உருவானது. இன்னொரு முறை பீகார் மாநிலமே உடைந்து ஜார்கண்ட் எனும் புதிய மாநிலம் உருவானது. இது போன்ற வேலைகளையே முதன்மையாக செய்துவந்த லாலு, 1997-ல் மாட்டுத் தீவன ஊழலில் சிக்கி ஜெயிலுக்கு போக வேண்டி வந்தது.
அப்போது கூட தனது அரசியல் மூளையை சரியாகப் பயன்படுத்தியவர், மனைவி ராப்ரி தேவியை முதல் அமைச்சராக்கி அவருடைய "ரிமோட்டை" தன் கையில் வைத்துக்கொண்டார். ஆனால், மாநிலத்தில் தொடர்ந்த அதிகமான கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் போன்றவற்றை லாலுவால் கட்டுப்படுத்த முடியவில்லை. 'சமோசாக்காளில் ஆலு (உருளைகிழங்கு) உள்ள வரை, பீகாரில் இந்த லாலு இருப்பான்' என அடிக்கடி, காமெடி வசனம் பேசிக் கொண்டிருந்தவரை 2005 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பீகார்வாசிகள் தூக்கி எறிந்து அங்கு நிதீஷ்குமாரை அமர வைத்தனர்.
இதை முன்கூட்டியே அறிந்ததாலோ, என்னவோ, 2004-ல் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்பியாகி தன் அரசியல் ஜாகையை டெல்லிக்கு மாற்றி கொண்ட லாலு ஒரு புதிய அவதாரத்தை எடுக்க முயன்றார். மத்தியில் துவக்கத்தில் உள்துறை அமைச்சகம் வேண்டும் என பிடிவாதம் பிடித்தவருக்கு, கிடைத்தது ரயில்வே அமைச்சகம்.
விளைவு, பீகாரில் ஜீரோவான லாலு, டெல்லியில் ஹீரோவானார். உலகின் பல முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு உயர் அதிகாரிகளை உருவாக்கும் அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனஜ்மெண்ட் கூட வகுப்பு நடத்த லாலுவுக்கு அழைப்பு விடுத்தது.
ரயில்வே அமைச்சராக இருந்த போது லாலு அடிக்கடி கூறுவார், 'ஒரு மாட்டை அடக்க வேண்டுமானால் அதன் வாலைப் பிடிக்கக்கூடாது: கொம்பைப் பிடிக்க வேண்டும். அதே போல் முழுமையாக பால் கறக்கப்படாத மாடு நோயில் படுத்துவிடும்.
சிறு வயதில் நான் மாடு மேய்க்க செல்லும் போது என் தாய் கூறிய வார்த்தைகள் இவை. அதைத்தான் நான் ரயில்வே துறையில் பயன்படுத்தி லாபமாக்கினேன்" என்று. இன்று அளவுக்கு அதிகமாக பணம் "கறந்து" 37 கோடி ரூபாய் கால்நடைத் தீவன ஊழலில் தண்டிக்கப்பட இருப்பதை என்னவென்று சொல்ல!
முக்கிய செய்திகள்
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago