தலைவர்களை மோசமாக விமர்சிக்கும் பாஜக: பிரதமர் தாக்கு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குறித்து குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி முன்வைக்கும் விமர்சனங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டியே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.
சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ராய்ப்பூரில் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
எதிர்க்கட்சிகளின் கொள்கைகளில் மாறுபட்ட கருத்து இருந்தால் அதை விமர்சிப்போம். ஆனால், பாஜகவில் உள்ள சில தலைவர்களைப் போன்று மோசமான வார்த்தைகளை நாம் பேச மாட்டோம். குறிப்பாக பிற கட்சித் தலைவர்கள், முதல்வர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கட்சியின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பேசக்கூடாது.
ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் கட்சிகள் ஈடுபடுவது சட்டப்படியான உரிமை. ஆனால், அதற்காக மலிவான விளம்பரத்தை தேடக் கூடாது. சட்டமன்றத் தேர்தல்களையும், மக்களவை பொதுத் தேர்தலையும் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் உண்மையில்லாத தகவல்களை கூறி வருகின்றனர். மிகவும் உணர்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் பாஜக தலைவர்கள் பல நேரங்களில் நாட்டின் வரலாற்றையும், புவியியலையும் கூட மாற்றிக் கூறிவிடுகின்றனர். வாய் சவடால் விடுக்கும் கட்சிகள் எல்லாம் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பதை சத்தீஸ்கர் மாநில மக்களும், இந்திய மக்களும் நன்கு அறிவார்கள்.
மதவாத கொள்கையுடைய கட்சிகள், வெளியே மதச்சார்பின்மை குறித்து பேசி தவறாக வழிநடத்த முயற்சிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சத்தீஸ்கரில் கடந்த மே 25-ம் தேதி நிகழ்ந்த தாக்குதல் சம்பவம், இங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமையை நிறைவேற்ற சத்தீஸ்கர் பாஜக அரசு தவறிவிட்டது. மே 25-ம் தேதி நிகழ்ந்த சம்பவத்துக்குப் பின்பு, மிகவும் கவனமாக இருந்து வருவதாக மாநில அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், மாநில அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததாலேயே காங்கிரஸ் தலைவர்களும், பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர் என்பதை பாஜக தெரிவிக்க மறுக்கிறது" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.