இரண்டாவது முறையாக அக்னி-5 பரிசோதனை வெற்றி

அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 5,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் அக்னி- 5 ஏவுகணை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்துள்ள 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அக்னி-5 ஏவுகணை 17 மீட்டர் உயரம் கொண்டது.மூன்று பகுதிகளைக் கொண்ட அக்னி-5 ஏவுகணையில் மூன்று பகுதிகளுமே திண்ம எரிபொருளில் இயங்குபவை. 1,000 கிலோ அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5யின் தாக்குதல் எல்லைக்குள் முழு ஆசியாவும், இதர நாடுகளும் அடக்கம்.

இந்தியாவின் அக்னி- 5 ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் தாண்டும் திறன் கொண்டது. அணு ஆயுதத்தை ஏந்தியபடி 5,000 கி.மீ வரை பாயும் திறன் கொண்ட அக்னி- 5 ஏவுகணை, 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன்முறையாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

பதினேழு மாதத்தில் 2 ஆவது முறையாக இந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் வீலர் தீவுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15), அதன் முழு திறனான 5,000 கி.மீ தொலைவைச் சென்று தாக்கும் வகையில் ஏவப்பட்டது.

ஏவுகணையில் போலியான ஆயுதம் இணைக்கப்பட்டு, இந்தியப் பெருங்கடலில் 5,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை நோக்கி ஏவப்பட்டது. ஏவப்பட்ட 20ஆவது நிமிடத்தில் இலக்கிலிருந்து சில மீட்டர்கள் வட்டத்துக்குள் வெற்றிகரமாகப் பாய்ந்தது.

ஏவுகணை ஏவப்பட்டதில் இருந்து இலக்கைத் தாக்கியது, போலியான ஆயுதம் வெடித்தது வரை ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது. 3 கப்பல்கள் இதனைக் கண்காணித்தன. ஒரு கப்பல் இலக்கில் இருந்து பாதி தொலைவிலும், இரு கப்பல்கள் இலக்குக்கு அருகிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

ஏவுகணைப் பரிசோதனைக்குப் பின் பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய (டிஆர்டிஓ) இயக்குநர் ஜெனரல் அவிநாஷ் சந்தர் கூறுகையில், “அக்னி-5 ஏவுகணையை இரண்டாவது முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தன் மூலம், இந்தியா கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைத் திறனை விரிவுபடுத்தியுள்ளது. இத்தகு ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கு தகுதியான நிலையில் உள்ளோம். இன்னும் சில கட்ட சோதனைகளுக்குப் பிறகு, ராணுவத்தில் அக்னி-5 இணைக்கப்படும்” என்றார்.

டிஆர்டிஓ- கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைப் பிரிவு தலைமைக் கட்டுப்பாட்டாளர் வி.ஜி. சேகரன் கூறுகையில், “இந்த வெற்றி மூலம் நம்பகத்தன்மை உறுதியாகியுள்ளது. அடுத்தகட்டத்துக்கு இத்தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியதும், விஞ்ஞானிகள் ஆரவாரத்துடன் பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

ஏவுகணைப் பரிசோதனை வெற்றி பெற்றதற்காக விஞ்ஞானிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE